/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மேல்சபையில் 4 பதவிகள் காலி கண்டுகொள்ளாத காங்., தலைமை
/
மேல்சபையில் 4 பதவிகள் காலி கண்டுகொள்ளாத காங்., தலைமை
மேல்சபையில் 4 பதவிகள் காலி கண்டுகொள்ளாத காங்., தலைமை
மேல்சபையில் 4 பதவிகள் காலி கண்டுகொள்ளாத காங்., தலைமை
ADDED : ஏப் 23, 2025 05:28 AM

பெங்களூரு : கர்நாடக மேல்சபையின் நான்கு இடங்கள் காலியாகி நான்கு மாதங்களுக்கு மேலாகியும், உறுப்பினர்களை நியமிக்க முடியாமல் முதல்வரும் துணை முதல்வரும் திணறுகின்றனர்.
கர்நாடக மேல்சபைக்கு, காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பட்ட பிராமண சமுதாயத்தின் வெங்கடேஷ், லம்பானி சமுதாயத்தின் பிரகாஷ் ராத்தோட் ஆகியோரின் பதவிக் காலம், கடந்த ஆண்டு அக்டோபரில் முடிந்தது.
ஒக்கலிகர் சமுதாயத்தின் யோகேஸ்வர், பா.ஜ., சார்பில் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் சென்னப்பட்டணா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், சீட் கிடைக்காத அதிருப்தியில் எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரசுக்கு தாவினார்.
அதே தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வானார். இவரால் காலியான எம்.எல்.சி., இடம் இன்னும் நிரப்பப்படவில்லை. ம.ஜ.த., சார்பில் நியமிக்கப்பட்ட திப்பேசாமியின் பதவிக் காலம் நடப்பாண்டு ஜனவரியில் முடிவடைந்தது.
மேல்சபையில் நான்கு நியமன உறுப்பினர் இடங்கள், காங்கிரசுக்கு கிடைக்கும். பெரும்பான்மையுடன் இருந்தும், நான்கு இடங்களை நிரப்ப முடியாமல், காங்கிரஸ் திணறுகிறது.
நான்கு இடங்களில் சீட் எதிர்பார்ப்போர் பட்டியலுடன் முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் டில்லி சென்றிருந்தனர். காங்., பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவுடன் ஆலோசனை நடத்தினர். வேட்பாளர்கள் பட்டியலுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. வெறுங்கையுடன் திரும்பினர்.
எம்.எல்.சி., பதவி மீது கண் வைத்துள்ளவர்களும், பல முறை டில்லிக்கு சென்று, தங்களுக்கு வாய்ப்பளிக்கும்படி வேண்டினர். வாய்ப்பு கேட்டு பலரும் மல்லுக்கட்டுகின்றனர்.
ஒருவருக்கு சீட் கொடுத்தால், மற்றவருக்கு அதிருப்தி ஏற்படும். எனவே நியமன பட்டியலுக்கு சம்மதித்து தலையாட்ட, மேலிடம் தயங்குகிறது. இந்த விஷயத்தில் கர்நாடக தலைவர்கள் இடையிலும், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. உறுப்பினர்கள் நியமனம் தாமதத்துக்கு, இதுவும் ஒரு காரணமாகும்.
முதல்வர், துணை முதல்வர் உட்பட முக்கிய தலைவர்கள் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்துடன், வேட்பாளர் பட்டியலை தயார் செய்து, டில்லிக்கு வரும்படி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் கட்சிக்குள் இருக்கும் எதிர்பார்ப்புகளை சமாளிப்பதே, முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் பெரும் தலைவலியாக உள்ளது. இவர்களால் மேல்சபை நியமனம் குறித்து ஆலோசிக்க முடியவில்லை. இந்த விஷயத்தை கிடப்பில் போட்டுள்ளனர்.

