முதல்வர் பதவி குழப்பத்தை தீர்க்க வேண்டும் மேலிடத்துக்கு காங்., - எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
முதல்வர் பதவி குழப்பத்தை தீர்க்க வேண்டும் மேலிடத்துக்கு காங்., - எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : பிப் 06, 2026 05:54 AM

தாவணகெரே: ''முதல்வர் பதவி விவகாரத்தில் ஏற்பட்டு உள்ள குழப்பத்தை, கட்சி மேலிடம் தீர்த்து வைக்க வேண்டும். சித்தராமையாவே தொடர்வார் என்று அறிவித்தாலும் கூட வரவேற்கிறேன்,'' என்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்கா கூறி உள்ளார்.
சித்தராமையா, சிவகுமாருக்கு தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று, காங்கிரஸ் மேலிடம் கடந்த 2023ல் ஒப்பந்தம் போட்டதாக கூறப்படுகிறது. இது உண்மை என்றால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதி, சித்தராமையா தன் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. அடுத்த மாதம் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்ய அவர் தயாராகி வருகிறார். பட்ஜெட் தாக்கலுக்கு பின், முதல்வர் பதவியை விட்டு கொடுப்பார் என்ற பேச்சு பரவலாக அடிபடுகிறது.
ஆனால் கட்சி மேலிடம் கூறும் வரை, நானே முதல்வர் என்று சித்தராமையா கூறி வருகிறார். இதனால் சிவகுமார் முதல்வர் ஆவாரா, ஆக மாட்டாரா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. சிவகுமாரின் ஆதரவாளர்களும் ஒருவித ஏமாற்றத்தில் உள்ளனர். இந்நிலையில் சிவகுமார் ஆதரவாளரான சென்னகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்கா நேற்று அளித்த பேட்டி:
கூடிய விரைவில் சிவகுமாரை, கட்சி மேலிடம் டில்லிக்கு அழைக்கலாம் என்று நினைக்கிறேன். முதல்வர் பதவி குறித்து பல மாதங்களாக குழப்பம் உள்ளது. குழப்பத்தை உடனடியாக மேலிடம் தீர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் கட்சியை விமர்சித்து, நாங்கள் ஊடகங்கள் முன்பு பேசினால் சரியாக இருக்காது. இனியும் சங்கராந்தி, யுகாதி, தீபாவளி என்று கூறி, நேரத்தை கடத்த வேண்டாம்.
சிவகுமார் முதல்வர் ஆவாரா, புதியவருக்கு பதவி கிடைக்குமா என்பதை, மேலிடம் வெளிப்படுத்த வேண்டும். சித்தராமையாவே தொடர்வார் என்று அறிவித்தாலும் கூட வரவேற்கிறேன். ஆனால் ஏதாவது ஒரு முடிவு தெரிந்தே ஆக வேண்டும். ஐந்து வாக்குறுதி திட்டங்களால் அரசுக்கு நல்ல பெயர் உள்ளது. அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறுகையில், ''பசவராஜ் சிவகங்காவுக்கு மட்டும் இல்லை; அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கும், முதல்வர் பதவி விவகாரத்தில் தெளிவு கிடைக்க வேண்டும்,'' என்றார்.
