/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இலவச வாக்குறுதி திட்டங்களுக்கு காங்., - எம்.எல்.ஏ.,க்கள்... எதிர்ப்பு!; வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கும்படி முதல்வருக்கு அழுத்தம்
/
இலவச வாக்குறுதி திட்டங்களுக்கு காங்., - எம்.எல்.ஏ.,க்கள்... எதிர்ப்பு!; வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கும்படி முதல்வருக்கு அழுத்தம்
இலவச வாக்குறுதி திட்டங்களுக்கு காங்., - எம்.எல்.ஏ.,க்கள்... எதிர்ப்பு!; வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கும்படி முதல்வருக்கு அழுத்தம்
இலவச வாக்குறுதி திட்டங்களுக்கு காங்., - எம்.எல்.ஏ.,க்கள்... எதிர்ப்பு!; வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கும்படி முதல்வருக்கு அழுத்தம்
ADDED : டிச 11, 2025 05:39 AM

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கும் கிரஹ லட்சுமி; அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்யும் சக்தி; அன்னபாக்யா ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி; 200 யூனிட்டிற்கு கீழ் பயன்படுத்துவோருக்கு இலவச மின்சாரம் வழங்கும் கிரஹ ஜோதி;
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவி தொகை வழங்கும் யுவநிதி ஆகிய ஐந்து இலவச வாக்குறுதி திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. இதற்காக ஆண்டிற்கு 52,000 கோடி ரூபாய் ஒதுக்குகின்றனர். இதில் சக்தி திட்டத்தை தவிர மற்ற நான்கு திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படவில்லை. பல குளறுபடிகள் நடக்கின்றன.
நிதி நிலை வாக்குறுதி திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்குவதால், எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளுக்கு வளர்ச்சி பணிகள் செய்ய நிதி ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. 10 கோடி ரூபாய், 50 கோடி ரூபாய் என்றே அரசால் நிதி ஒதுக்க முடிகிறது. பெரிய திட்டங்களுக்கும் குறிப்பிட்ட தொகை தான் ஒதுக்கப்படும் நிலைமை உள்ளது. ஆனாலும் அரசின் நிதி நிலை நன்றாக இருப்பதாக, சித்தராமையா கூறி வருகிறார்.
இந்நிலையில், பெலகாவியில் நடக்கும் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரை ஒட்டி, எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுப்பது பற்றி, சித்தராமையா தலை மையில் நேற்று முன்தினம் இரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பேசிய சில எம்.எல்.ஏ.,க்கள், 'ஐந்து வாக்குறுதி திட்டங்களுக்கு வரவேற்பு உள்ளது. ஆனாலும் வாக்குறுதி திட்டங்களை முன்நிறுத்தியே, அடுத்த தேர்தலில் மக்களிடம் ஓட்டு கேட்க முடியாது. எங்களுக்கு குறைந்த நிதியே கிடைப்பதால், வளர்ச்சி பணிகளை செய்ய முடியவில்லை.
'மக்கள் வளர்ச்சி பணிகள் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்து உள்ளனர். பணிகள் செய்யாவிட்டால், அடுத்த தேர்தலில் ஓட்டு கேட்க செல்ல முடியாது' என்றும் கூறி உள்ளனர். மேலும் சில எம்.எல்.ஏ.,க்கள், 'வாக்குறுதி திட்டங்களை கைவிட்டு விடுங்கள். அதற்கு பதிலாக புதிய திட்டங்களை கொண்டு வாருங்கள்' என்று, முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பேசி உள்ளனர்.
அப்போது பேசிய சித்தராமையா, 'வாக்குறுதி திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனை நிறுத்த வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க முயற்சி செய்கிறேன்' என்று கூறி உள்ளார்.
மேலும், 'அமைச்சர்களுடன், நீங்கள் ஒருங்கிணைந்து செல்லுங்கள். கரும்பு, மக்கா சோளம் விஷயத்தில் பா.ஜ., அரசியல் செய்கிறது. மத்திய அரசு மீது உள்ள தவறை மறைக்க, நம் மீது பழி போடுகின்றனர். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, மத்திய அரசு செய்யும் தவறை மக்கள் முன் எடுத்து செல்ல வேண்டியது அவசியம்' என்றும் கூறி இருக்கிறார்.
அஸ்திரம் வாக்குறுதி திட்டங்களுக்கு எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தது, பா.ஜ.,வுக்கு அஸ்திரமாக மாறி உள்ளது. 'ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கே வாக்குறுதி திட்டங்கள் மீது விருப்பம் இல்லை. வளர்ச்சி பணிகளை செய்ய நிதி ஒதுக்குங்கள்' என்று, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோர் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சித்தராமையா கூறுகையில், ''வாக்குறுதி திட்டங்களுக்கு எந்த எம்.எல்.ஏ.,வும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதுபற்றி நாங்கள் கூட்டத்தில் விவாதிக்கவே இல்லை,'' என்றார்.

