/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண் கிடைக்காததால் ஆண்கள் விரக்தி; மடம் கட்டித்தாருங்கள் என கோரிக்கை
/
பெண் கிடைக்காததால் ஆண்கள் விரக்தி; மடம் கட்டித்தாருங்கள் என கோரிக்கை
பெண் கிடைக்காததால் ஆண்கள் விரக்தி; மடம் கட்டித்தாருங்கள் என கோரிக்கை
பெண் கிடைக்காததால் ஆண்கள் விரக்தி; மடம் கட்டித்தாருங்கள் என கோரிக்கை
ADDED : டிச 11, 2025 05:42 AM
மாண்டியா: திருமணத்துக்கு பெண் கிடைக்காத ஏக்கத்தில் ஆண்கள் பலரும் தங்களுக்கு மடம் கட்டித்தர வேண்டும் என, கிராம பஞ்சாயத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களின் விசித்திரமான கோரிக்கையை கேட்டு, கிராம பஞ்சாயத்து அதிர்ச்சி அடைந்துள்ளது.
விவசாய இளைஞர்கள் என்றால் பெண் வீட்டார் முகத்தை சுழிக்கின்றனர். இவர்களை திருமணம் செய்து கொள்ள, பெண்களும் முன் வருவதில்லை. இந்த பிரச்னை பல காலமாக உள்ளது. பல கிராமங்களில் விவசாயிகள் திருமணமாகாமல், காலம் கடத்துகின்றனர். திருமண வயதை தாண்டியுள்ளனர்.
தங்களுக்கு பெண் கிடைக்க வேண்டும் என, பிரார்த்தனை செய்து மலை மஹாதேஸ்வரா மலைக்கு பாதயாத்திரை நடத்துகின்றனர். மாண்டியாவிலும் இத்தகைய பிரச்னை உள்ளது.
மாண்டியாவின் மரளிகா கிராமத்தில் விவசாயம் செய்யும் ஆண்களுக்கு பெண் கிடைக்கவில்லை. ஊர், ஊராக பெண் தேடி அலுத்து போயுள்ளனர். இந்த கிராமத்தில் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, டாக்டர்கள், பொறியாளர்களுக்கும் பெண் கொடுக்க மறுக்கின்றனர். கிராமத்து இளைஞர்களை மணக்க, பெண்களுக்கு விருப்பம் இல்லை. இதன் விளைவாக கிராமத்தில் திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பலர் திருமண வயதை தாண்டிவிட்டனர்.
இதனால் விரக்தி அடைந்துள்ள, 30 க்கும் மேற்பட்ட ஆண்கள் சேர்ந்து கையெழுத்திட்டு, கிராம பஞ்சாயத்திடம் விசித்திரமான கோரிக்கையை வைத்துள்ளனர். 'விவசாயிகள், கிராமங்களில் வசிக்கும் ஆண்களுக்கு பெண் கொடுக்க, பெற்றோர் முன் வருவது இல்லை.
எங்களை திருமணம் செய்து கொள்ள, பெண்களும் சம்மதிப்பது இல்லை. காத்திருந்து, காத்திருந்து எங்களுக்கு வயதாகிறது. இதே கிராமத்தில் எங்களுக்கு மடம் கட்டித்தாருங்கள்' என கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களின் விசித்திரமான கோரிக்கையை கேட்டு, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கோரிக்கையை, தாசில்தாரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக, பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

