தலைமை தேர்தல் கமிஷனரை கண்டித்து பெங்களூரில் காங்கிரஸ் போராட்டம்
தலைமை தேர்தல் கமிஷனரை கண்டித்து பெங்களூரில் காங்கிரஸ் போராட்டம்
ADDED : செப் 26, 2026 11:16 PM

பெங்களூரு: ''தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை கண்டித்து, பெங்களூரில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உட்பட பல்வேறு விவகாரங்களில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு, பிற தேர்தல் கமிஷனர்களான சுக்பீர்சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் சமீபத்தில் செய்தி வெளியானது.
ஞானேஷ்குமாரை கண்டித்து பல மாநிலங்களில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வகையில், பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று கர்நாடக காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடந்தது.
மாநில காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத், முதல்வர் சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
சிறுபான்மை சமூகத்தினரின் ஓட்டுகளை நீக்க சதி நடக்கிறது. இதை எதிர்த்து காங்கிரஸ் போராடுகிறது. இவ்விஷயத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தலையிட வேண்டும். தேர்தல் ஆணையத்தை அவர் கலைக்க வேண்டும்.
ஞானேஷ்குமார் கைது செய்யப்பட்டு, அவரது பதவியை பறிக்க வேண்டும். சட்டவிரோதமாக நடத்தப்பட்ட தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும்.
தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட தன்னாட்சி தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்துவர்.
சமீபத்தில் நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆர்., பணிகளை ரத்து செய்து புதிதாக எஸ்.ஐ.ஆர்., நடத்தப்பட வேண்டும்.
கர்நாடகாவில் 5.54 கோடி வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர்.,க்கு பிறகு 4.46 கோடியாக குறைந்தது.
வாக்களிப்பது என்பது ஒவ்வொரு தனிநபரின் உரிமை. வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். ஓட்டுச்சீட்டு முறைகளில் தேர்தல் நடக்கும். எஸ்.ஐ.ஆர்., எதிர்ப்பை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு செல்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தார்மிக உரிமையில்லை தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவியிலிருந்து நீக்கவும். ஜனநாயகம் நிலைத்திருக்க சுதந்திரமான, வெளிப்படையான தேர்தல்கள் இன்றியமையாதவை. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படாவிட்டால், ஜனநாயகம் நிலைத்திருக்காது. தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு அடிபணிய கூடாது. பா.ஜ., விதிகளின்படி, 75 வயதை கடந்தவர்களுக்கு ஓய்வு வழங்கப்படுகிறது. ஆனால், பிரதமர் மோடிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. பிரதமர் பதவியில் தொடருவதற்கு அவருக்கு தார்மிக உரிமையில்லை. - சித்தராமையா, முன்னாள் முதல்வர்
