/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.எஸ்.எஸ்., உருவ பொம்மை எரிக்க முயன்ற காங்கிரசார் கைது
/
ஆர்.எஸ்.எஸ்., உருவ பொம்மை எரிக்க முயன்ற காங்கிரசார் கைது
ஆர்.எஸ்.எஸ்., உருவ பொம்மை எரிக்க முயன்ற காங்கிரசார் கைது
ஆர்.எஸ்.எஸ்., உருவ பொம்மை எரிக்க முயன்ற காங்கிரசார் கைது
ADDED : அக் 15, 2025 01:03 AM
பெங்களூரு : ஆர்.எஸ்.எஸ்., முகாமில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறி, கேரள வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில், ஆர்.எஸ்.எஸ்., உருவ பொம்மை, தொப்பியை எரிக்க முயன்ற, இளைஞர் காங்கிரசார் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கேரளாவின் கோட்டயத்தை சேர்ந்தவர் ஆனந்த் அஜி, 26. ஐ.டி., ஊழியர். இவர், சில தினங்களுக்கு முன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், 'சிறுவனாக இருந்த போது, ஆர்.எஸ்.எஸ்., முகாமில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்கிறேன்' எனவும் கூறப்பட்டு இருந்தது.
ஆனந்த் அஜியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறி, பெங்களூரு சுதந்திர பூங்காவில், கர்நாடக இளைஞர் காங்கிரசார் நேற்று இரவு போராட்டம் நடத்தினர்.
தலைவர் மஞ்சுநாத் கவுடா பேசியதாவது:
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்., ஊழியரின் பாலியல் துன்புறுத்தலால், ஆனந்த் அஜி என்பவர் தற்கொலை செய்து உள்ளார். ஆர்.எஸ்.எஸ்.,சில் நடக்கும் ஒழுக்க கேடு, சுரண்டல் பற்றி, அந்த அமைப்பில் பணியாற்றிய நிறைய ஊழியர்கள் பேசி உள்ளனர். அங்கு நடக்கும் பாலியல் துஷ்பிரயோகம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நுாற்றாண்டு விழாவை கொண்டாடுவதாக கூறும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. சுதந்திர போராட்டத்தில் அவர்கள் பங்களிப்பு இல்லை. தங்கள் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றாத அவர்கள் துரோகிகள். நாட்டின் ஒற்றுமை, வளர்ச்சிக்கு எதிரானவர்கள். ஜாதி, மதத்திற்கு இடையில் பிளவை ஏற்படுத்தி, சமூகத்தை அழிப்பது அவர்கள் நோக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, ஆனந்த் அஜி மரணத்திற்கு நியாயம் கேட்டு கோஷம் எழுப்பியதுடன், ஆர்.எஸ்.எஸ்., உருவ பொம்மை, கருப்பு தொப்பியை எரிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீசாருடன் வாக்குவாதம் செய்த, இளைஞர் காங்கிரசார் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். பேரிகாட் மீது ஏறி, மஞ்சுநாத் கவுடா போராட்டம் நடத்தினார். நிலைமை கை மீறி சென்றதால், இளைஞர் காங்கிரசாரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி அழைத்து சென்றனர். பின், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.