ADDED : நவ 24, 2025 03:38 AM

ராம்நகர்: தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியில் மோதியதில், ரயில் இன்ஜின் ஆயில் பாக்ஸ் உடைந்தது. ஹம்பி ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என்று விசாரணை நடக்கிறது.
மைசூரில் இருந்து ஹூப்பள்ளிக்கு தினமும் 'ஹம்பி எக்ஸ்பிரஸ்' ரயில் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை 6:50 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்ட ரயில் இரவு 8:15 மணியளவில், ராம்நகரின் சென்னப்பட்டணா வந்தாரகுப்பே ரயில் நிலையத்தை கடந்து சென்றது.
திடீரென இன்ஜினில் இருந்து ஏதோ பயங்கர சத்தம் கேட்டதால், லோகோ பைலட் ரயிலை நிறுத்தினார். இறங்கி பார்த்த போது ஆயில் பாக்ஸ் உடைந்து, ஆயில் கசிந்தது தெரிந்தது. சத்தம் கேட்ட இடத்தில் சென்று பார்த்த போது, தண்டவாளத்தில் பெரிய இரும்பு கம்பி கிடந்தது.
இரும்பு கம்பி, இன்ஜினின் ஆயில் பாக்ஸ் மீது மோதியதால் பாக்ஸ் உடைந்து ஆயில் கசிந்தது தெரிந்தது. ஆயில் கசிவை நிறுத்த முடியாததால், ஹெஜ்ஜலா ரயில் நிலையத்தில் இருந்து மாற்று இன்ஜின் கொண்டு வரப்பட்டு ரயிலில் பொருத்தப்பட்டது. இரண்டு மணி நேரம் தாமதமாக இரவு 10:15 மணிக்கு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
தண்டவாளத்தில் இரும்பு கம்பியை வைத்து, ரயிலை கவிழ்க்க மர்மநபர்கள் சதி செய்தனரா என்று, ராம்நகர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
கடந்த மே மாதம் இதே இடத்தில் மைசூரு - உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்ற போது, இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது. லோகோ பைலட் ரயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

