/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பைக் டாக்சி' நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?
/
'பைக் டாக்சி' நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?
'பைக் டாக்சி' நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?
'பைக் டாக்சி' நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?
ADDED : ஆக 27, 2025 07:41 AM
பெங்களூரு : 'பைக் டாக்சி' நிர்வாகத்தினர் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர உள்ளதாக போக்குவரத்து, சாலை பாதுகாப்பு கமிஷனர் யோகேஷ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 'பைக் டாக்சி' இயக்கத்திற்கு கடந்த ஜூன் 16ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்தது. மாநிலம் முழுவதும் ராபிடோ, ஓலா, ஊபர் உள்ளிட்ட பைக் டாக்சி செயலிகளில் பைக் டாக்சி சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பைக் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக சலசலப்பு எழுந்தது.
இந்நிலையில், கடந்த 21ம் தேதி நீதிமன்ற உத்தரவை மீறி, பைக் டாக்சிகள் மீண்டும் செயல்பட துவங்கின. இவ்விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, நேற்று முன்தினம் ஓலா, ஊபர் செயலிகளில் பைக் டாக்சி சேவை நிறுத்தப்பட்டன. ஆனால், ராபிடோ செயலியில் மட்டும் பைக் டாக்சி சேவை நிறுத்தப்படவில்லை.
ராபிடோ செயலியில் நேற்றும் பைக் டாக்சி சேவை கிடைத்தது. அதுவும், முன்பு வசூலிக்கப்பட்ட தொகையை விட குறைவாகவே கட்டணம் வசூலிக்கப்பட்டது. காரணம், கர்நாடகாவில் மட்டும் பைக் டாக்சிகளுக்கான கமிஷன் தொகையை செயலி நிர்வாகம் நிறுத்தி உள்ளது.
பைக் டாக்சி ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக சேவையை தொடர்வதாக நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதன் மூலம் பயணியரும் வழக்கமாக செலுத்தும் கட்டணத்தை விட, 10 முதல் 20 ரூபாய் வரை குறைவாகவே செலுத்தினர்.
இதுகுறித்து மாநில போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறையின் கமிஷனர் யோகேஷ் கூறுகையில், ''மாநிலத்தில் பைக் டாக்சி இயக்கத்திற்கு அனுமதி இல்லை என நீதிமன்றம் தெளிவாக கூறி உள்ளது.
''இருப்பினும், சட்ட விரோதமாக செயலிகளில் பைக் டாக்சி சேவை நடக்கிறது. இதுகுறித்து, தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது. பைக் டாக்சி நிர்வாகத்தினர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தொடர உள்ளோம்,'' என்றார்.