/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தொடர் மழையால் தங்கவயலில் பாதிப்பு
/
தொடர் மழையால் தங்கவயலில் பாதிப்பு
ADDED : அக் 07, 2025 04:56 AM

தங்கவயல்: தங்கவயலில் தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு ஒரு வீடு இடிந்து விழுந்தது.
தங்கவயலில் தொடர்ந்து நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
உரிகம் பேட்டையில் கால்வாய் நிரம்பி வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. நேற்று அதிகாலை, 4:30 மணியளவில் பிஷ் லைன் பகுதியில் ஆபித் பாஷா, 57, என்பவரின் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
அப்போது பக்கத்து அறையில் ஆபித் பாஷா, மகன் சுஹேல், 19, ஆகியோர் துாங்கிக் கொண்டிருந்தனர். இடிந்து விழுந்த வீட்டை நகராட்சி ஆணையர் ஆஞ்சநேயலு பார்வையிட்டார்.
“நகராட்சி மூலம் நிவாரண உதவி வழங்க வாய்ப்பு இல்லை. ஆஷ்ரியா திட்டத்தில் வீடு கட்டித் தரக்கோரி விண்ணப்பியுங்கள்,” என, ஆணையர் தெரிவித்தார்.
கெசவனகெரே ஏரி நிரம்பி, மறுகால் பாய்ந்தது. தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்தது. இதனால் கேசம்பள்ளி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.