/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் அரசுக்கு ரூ.600 கோடி இழப்பு
/
குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் அரசுக்கு ரூ.600 கோடி இழப்பு
குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் அரசுக்கு ரூ.600 கோடி இழப்பு
குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் அரசுக்கு ரூ.600 கோடி இழப்பு
ADDED : ஆக 31, 2025 06:14 AM
பெங்களூரு: ராயல் ஆர்க்கிட் ஹோட்டல்ஸ் லிமிடெட்டுக்கு, அரசு நிலத்தை குத்தகைக்கு வழங்குவதில், விதிகள் மீறப்பட்டதால் மாநில அரசுக்கு 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு, தொம்மலுாரில் உள்ள கர்நாடக கோல்ப் அசோசியேஷன் அருகில் கே.எஸ்.டி.டி.சி., எனும் கர்நாடக சுற்றுலா மேம்பாட்டு கார்ப்பரேஷனுக்கு சொந்தமான, 4.32 ஏக்கர் நிலம் உள்ளது. அதாவது, 1.8 லட்சம் சதுர அடி அரசு நிலத்தை, ஸ்டார் ஹோட்டல்களை நடத்தும், ராயல் ஆர்க்கிட் ஹோட்டல்ஸ் லிமிடெட் நிறுவனம், குத்தகைக்கு பெற்றது.
விதிமீறல் கடந்த 1992ல் நிலம் வழங்கப்பட்டபோது, ஆண்டு வாடகையாக ஏக்கருக்கு 1.11 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு குத்தகை வழங்கப்பட்டிருந்தது. இதன் காலம் 2022 ஜனவரி 1ல் முடிந்தது.
குத்தகையை புதுப்பிக்கக் கோரி, ராயல் ஆர்க்கிட் லிமிடெட் நிறுவனம் விண்ணப்பித்தது. அப்போது சுற்றுலாத்துறை அதிகாரிகள், கோப்புகளை ஆய்வு செய்தபோது, ராயல் ஆர்க்கிட் ஒப்பந்த விதிகளை மீறியது தெரிந்தது.
ஹோட்டல் தொழிலுக்காக கே.எஸ்.டி.டி.சி.,யிடம், ஒப்பந்த அடிப்படையில் பெற்றிருந்த நிலத்தில், 27,000 சதுர அடி நிலத்தை, 23 லட்சம் ரூபாய் வாடகைக்கு, 'கோல்ப் வியூ ஹோம்ஸ்' என்ற நிறுவனத்துக்கு, ராயல் ஆர்க்கிட் நிறுவனம், உள் ஒப்பந்தம் அளித்திருப்பதை, அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன் மூலம் இந்நிறுவனம் விதிகளை மீறியிருந்தது.
இதுகுறித்து, அரசுக்கு சுற்றுலாத்துறை அதிகாரிகள், 'ஒப்பந்தத்தை புதுப்பிக்கக் கூடாது. அந்நிறுவனம் ஒப்பந்த விதிகளை மீறியுள்ளது. நிலத்தை பெறும் ஒப்பந்ததாரர், அந்த நிலத்தை மற்றவருக்கு விற்கவோ, அடமானம் வைக்கவோ கூடாது என, நிபந்தனை விதித்து, 1992 ஜூலை 20ல் அரசே உத்தரவிட்டிருந்தது.
ஆனால் ராயல் ஆர்க்கிட் நிறுவனம், அரசிடம் அனுமதி பெறாமல், நிலத்தை வேறு ஒரு நிறுவனத்துக்கு உள் ஒப்பந்தம் அளித்தது சட்டவிரோதம். ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் வேண்டுகோளை நிராகரிக்க வேண்டும். புதிய டெண்டர் கோர வேண்டும்' என, கடிதம் எழுதி வலியுறுத்தியிருந்தனர்.
உள் ஒப்பந்தம் ரத்து ஆனால் சுற்றுலாத் துறையின் எதிர்ப்பையும் மீறி கே.எஸ்.டி.டி.சி., அதிகாரிகள், 2023 மார்ச்சில், ராயல் ஆர்க்கிட் நிறுவனம் அளித்திருந்த உள் ஒப்பந்தத்தை மட்டும் ரத்து செய்து, 2.19 ஏக்கர் நிலத்தின் ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளனர். இதை, சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.
விதிகளை மீறி, மிகவும் குறைந்த தொகைக்கு, விலை மதிப்புள்ள நிலத்தை ஒப்பந்தத்துக்கு வழங்கியதால், அரசு கருவூலத்துக்கு 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.