/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு 'தினமலர்' அலுவலகத்தில் 'பவள விழா' கொண்டாட்டம் முகவர்கள், விற்பனையாளர்கள், டெலிவரி பாய்கள், வாசகர்கள் உற்சாகம்
/
பெங்களூரு 'தினமலர்' அலுவலகத்தில் 'பவள விழா' கொண்டாட்டம் முகவர்கள், விற்பனையாளர்கள், டெலிவரி பாய்கள், வாசகர்கள் உற்சாகம்
பெங்களூரு 'தினமலர்' அலுவலகத்தில் 'பவள விழா' கொண்டாட்டம் முகவர்கள், விற்பனையாளர்கள், டெலிவரி பாய்கள், வாசகர்கள் உற்சாகம்
பெங்களூரு 'தினமலர்' அலுவலகத்தில் 'பவள விழா' கொண்டாட்டம் முகவர்கள், விற்பனையாளர்கள், டெலிவரி பாய்கள், வாசகர்கள் உற்சாகம்
ADDED : செப் 07, 2025 02:29 AM
பெங்களூரு: 'தினமலர்' நாளிதழ் நேற்று 75வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதற்கான பவள விழா கொண்டாட்டம், பெங்களூரு தினமலர் அலுவலகத்தில் கோலாகலமாக நடந்தது. பல வாசகர்கள் நகைச்சுவையாக பேசி உற்சாகப்படுத்தினர்.
'உண்மையின் உரைகல்' என்ற வாசகத்திற்கேற்ப ஒவ்வொரு செய்தியிலும் உண்மையை சொல்லும் ஒரே நாளிதழ் தினமலர் தான். இதனால், உலக தமிழர்கள் அனைவரும் விரும்பி வாசிக்கக்கூடிய முன்னணி நாளிதழாக இன்றும் வலம் வருகிறது.
வாசகரையே முதலாளியாக கருதும் ஒரே நாளிதழ். இத்தனை சிறப்பு வாய்ந்த நாளிதழ் 74 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து, 75வது ஆண்டில் நேற்று அடியெடுத்து வைத்தது.
தினமலர் பவள விழா கொண்டாட்டம், பெங்களூரில் உள்ள தினமலர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழா துவங்குவதற்கு முன்னதாகவே வாசகர்கள் வருகை தந்தனர். அவர்கள் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.
பவள விழா கேக் சிவாஜி நகர் திம்மையா சாலை, காசிவிஸ்வநாதேஸ்வரர் கோவிலின் பிரதான அர்ச்சகர் ராஜா பாலசந்திர சிவம் கணபதி பூஜை செய்து விழாவை துவக்கி வைத்தார். 'தினமலர் பவள விழா' வாசகம் கொண்ட கேக்கை, வாசகர்கள், ஏஜென்டுகள் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவில் பலரும் தினமலரை பாராட்டினர்.
ராஜா பாலசந்திரசிவம்: தினமலர் பவள விழா கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்துகள். பெங்களூரில் நாளிதழ் வளர்ச்சிக்கு பலரும் கடுமையாக உழைக்கின்றனர். அக்டோபர் 2ம் தேதி காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு, 'அரிச்சுவடி ஆரம்பம்' விழாவை நடத்துகின்றனர்.
இதில் பங்கேற்க அனைவரும் தங்கள் பிள்ளைகளுடன் வர வேண்டும். குழந்தைகளுக்கு ஜாதி, மதம் என எதுவும் கிடையாது. இவ்விழா, குழந்தைகளின் எதிர்காலத்திற்கு முக்கியமானது. தினமலர் குடும்பத்தில் நானும் ஒருவன்.
பெங்., தமிழ் சங்க முன்னாள் தலைவர் இராசு மாறன்: பத்திரிகை நடத்துவது சுலபமான விஷயம் இல்லை. நிறைய பத்திரிகைகள் துவங்கிய நேரத்தில் காணாமல் போய்விட்டன. விளையாட்டு, உலகம், தேசியம் என அனைத்து செய்திகளுக்கும் தனிப்பக்கங்கள் உள்ளன. கல்வெட்டு குறித்த செய்திகள் வெளியாவது, எனக்கு மிகவும் பிடித்தது. இது மற்ற நாளிதழ்களில் வெளியாவதில்லை. இதை வெளியிடுவது சாதாரண விஷயம் அல்ல. இதற்காக மெனக்கெட வேண்டும். ஆட்சியாளர்களுக்கு எதிராக தினமலர் தைரியமாக செய்தி வெளியிடுகிறது. மற்ற பத்திரிகைகள் இதை செய்வதில்லை. தினமலர் நுாற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் நாம் பங்கேற்க வேண்டும்.
தமிழர் நலன் தியாகராஜநகர் எஸ்.வி.சி.கே., பள்ளி முதல்வர் லட்சுமிபதி: தினமலரை வாழ்த்த எனக்கு வயதில்லை. பெங்களூரு செய்திகள் விரிவாக, தெளிவாக வெளியிடப்படுகின்றன. தமிழர் விழாக்கள் எங்கு நடக்கின்றன என்பது குறித்து தினமலரை பார்த்து அறிந்து கொள்ளலாம், செய்திகள் வாசிப்பதற்கு மிக எளிதாக உள்ளது. தினமலர் தமிழ், தமிழர் நலனுக்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறது.
பெங்., தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன்: இது ஒரு சாதாரண நாள் கிடையாது. மாறாக தினமலரின் பொன் நாள். ஆட்சி மாற்றம், பொருளாதார ஏற்ற இறக்கம், கொரோனா, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின் போதும் மக்களின் வலியை பிரதிபலித்தது. தினமலரில் வராத புத்தகங்கள் இல்லை. தினமலரின் பலமே அவர்களின் வாசகர்கள் தான்.
தினமலர்.காம் மூலம் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்கின்றனர். வாசகர், ஊழியர்களின் கூட்டு முயற்சியால் தினமலர் பத்திரிகை உலகில் வெற்றி பெறுகிறது.
பெங்., தமிழ்ச்சங்க முன்னாள் செயலர் வா.ஸ்ரீதரன்: தினமலர் துவங்கிய 1951ல் நானும் பிறந்தேன். நுாற்றாண்டு விழாவிலும் பங்கேற்க வேண்டும் என்பதே எனது ஆசை. எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்தியை வெளியிடுவது தினமலர் மட்டும் தான். தினமலரின் ஆண்டு சந்தா என்பது சிறந்த திட்டமாகும். ஆண்டு சந்தா பெறாதவர்கள், உடனடியாக சந்தா திட்டத்தில் இணையுங்கள். ஆண்டுக்கு 2,000 ரூபாய் கொடுத்தாலே, இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. இந்த சந்தாவை ஏழ்மையில் இருப்பவர்களுக்காக நாம் கண்டிப்பாக செய்து கொடுக்க வேண்டும்.
கர்நாடக மாநில தி.மு.க., பொருளாளர் தட்சணாமூர்த்தி: தமிழன் என்ற உணர்வோடு தினமலரை வணங்குகிறேன். கட்சி வேறு தமிழர் என்ற உணர்வு வேறு. தமிழக முதல்வர் ஸ்டாலின், தினமலர் நாளிதழுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் பெயர் தான் பத்திரிகை தர்மம். கட்சி பாகுபாடின்றி அனைவரும் தமிழர் என்ற உணர்வுடன் ஒன்றிணைய வேண்டும்.
அதிகாரிகள் தவிப்பு கோலார் மாவட்ட சாரணர் இயக்க துணை ஆணையர் ஆர்.பிரபுராம்: தினமலரில் உடனுக்குடன் வேகமாக செய்திகள் தருவர். அதுவும் தினமலர் பெங்களூரு பதிப்பில் வெளியாகும் 'தங்கவயல் செக்போஸ்ட்' பக்கத்தை பார்த்து, பல அதிகாரிகள், அரசியல்வாதிகள் துாக்கமின்றி தவிக்கின்றனர். ஆன்மிக செய்திகளை படிக்கும் போது, நாமே நேரடியாக கோவிலுக்கு சென்றது போல தோன்றுகிறது. நான் புதுடில்லிக்கு போனாலும் கூட தினமலரை தான் வாங்கி படிப்பேன்.
நவ்ரங் ஏஜென்ட் ரவி (கன்னட மொழியில்): தினமலர் சிறந்த பத்திரிகை என வாசகர்கள் கூறுகின்றனர். எனக்கு தமிழ் படிக்க தெரியாது. ஆனால், செய்தி தாளின் தரம், மை, பக்க வடிவமைப்பு குறித்து நன்கு தெரியும். இவை அனைத்திலும் தினமலர் சிறப்பாக உள்ளது. பெங்களூரில் உள்ள பெரிய அதிகாரிகள் வீட்டிலும் தினமலர் உள்ளது. கன்னடம், ஆங்கிலம் மொழிகளிலும் நாளிதழை துவங்க வேண்டும்.
தொம்மலுார் வாசகர் மணி: தினமலர் மட்டும் தான் படிப்பேன். என் பேரக்குழந்தைகள், சிறுவர் மலருக்கு படம் வரைந்து அனுப்பியுள்ளனர். தினமலரில் வெளியாகும் சுருக்கெழுத்து, முக்கிய செய்திகளை பைண்டிங் செய்து வைத்து உள்ளேன். இதை என் அடுத்த தலைமுறை படித்து, தமிழின் அருமையை தெரிந்து கொள்ளும். தினமலரை திறந்தால் தான் எனக்கு பொழுதே விடியும்.
வாசகர் லயோலா: தினமலரை படிக்காமல் நான் துாங்க மாட்டேன். எனது மனைவிக்கு பூ வாங்கி தருகிறோனோ இல்லையோ, தாமரை மலர் கொண்ட தினமலரை, தினமும் தவறாமல் வாங்கி கொடுப்பேன். சிறுவயதில் இருந்தே தமிழின் மீது இருந்த ஆர்வம், தினமலரின் மீது திரும்பியது.