/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாநகராட்சி ஊழியர்கள் 8ல் போராட்டம்
/
மாநகராட்சி ஊழியர்கள் 8ல் போராட்டம்
ADDED : ஜூலை 05, 2025 10:59 PM
பெங்களூரு: தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெங்களூரு மாநகராட்சியில் பணி செய்யும் ஊழியர்கள், வரும் 8ம் தேதி போராட்டம் நடத்த உள்ளனர்.
பெங்களூரு மாநகராட்சியின் 225 வார்டுகளில் காலியாக உள்ள 6,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்; லாக்சேப் திட்டத்தின் கீழ் வருகை பதிவேடு செய்வதில், நிறைய குழப்பம் உள்ளதால், அந்த திட்டத்தை கைவிட வேண்டும்; மாநகராட்சியின் எட்டு மண்டலங்களுக்கும் நிர்வாக பிரிவு சிறப்பு கமிஷனரை நியமிக்க கூடாது;
பல துறைகளில் டெபுடேஷன் அடிப்படையில் பணியாற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களை திரும்ப அனுப்ப வேண்டும்; அரசின் அனைத்து சுகாதார திட்டங்களையும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாநகராட்சியில் சட்டவிரோதமாக பணி செய்யும் மார்ஷல்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசுக்கு, மாநகராட்சி ஊழியர்கள் சங்கம் பல முறை கோரிக்கை விடுத்தது.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற, அரசு தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் அரசின் கவனம் தங்கள் மீது செலுத்த வைக்கும் வகையில், மாநகராட்சி ஊழியர்கள் விடுமுறை எடுத்து, வரும் 8ம் தேதி சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்த உள்ளனர்.
இதுபோல ஹூப்பள்ளி - தார்வாட்; துமகூரு, மங்களூரு, ஷிவமொக்கா, தாவணகெரே, மைசூரு, பெலகாவி மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களும் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அன்றைய தினம் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.