/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹாசனாம்பா உத்சவத்தில் துப்புரவு பணி செய்தவர்களுக்கு மாநகராட்சி விருந்து
/
ஹாசனாம்பா உத்சவத்தில் துப்புரவு பணி செய்தவர்களுக்கு மாநகராட்சி விருந்து
ஹாசனாம்பா உத்சவத்தில் துப்புரவு பணி செய்தவர்களுக்கு மாநகராட்சி விருந்து
ஹாசனாம்பா உத்சவத்தில் துப்புரவு பணி செய்தவர்களுக்கு மாநகராட்சி விருந்து
ADDED : அக் 27, 2025 03:24 AM
ஹாசன்: ஹாசனாம்பா உற்சவத்தில் இரவு, பகலாக பாடுபட்டு நகரை துாய்மையாக வைத்திருந்த துாய்மை பணியாளர்களுக்கு, ஹாசன் மாநகராட்சி அதிகாரிகள், நட்சத்திர ஹோட்டலில் விருந்து கொடுத்து கவுரவித்தனர்.
ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும், ஹாசனின் ஹாசனாம்பா உத்சவத்தில், தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இத்தகைய நேரத்தில் நகரை துாய்மையாக வைத்திருப்பது, எளிதான விஷயம் அல்ல.
துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை இருந்ததால், சித்ரதுர்காவில் இருந்து, ஒப்பந்த அடிப்படையில் 60க்கும் மேற்பட்டோர் ஹாசனுக்கு வரவழைக்கப்பட்டனர்.
நிரந்தர துாய்மை பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் இரவு, பகலாக பணியாற்றி ஹாசன் நகரை சுத்தமாக வைத்திருந்தனர். சாலைகள், கோவிலின் சுற்றுப்பகுதிகள், பொது இடங்களை சுத்தம் செய்தனர். ஹாசனாம்பா உற்சவம் எந்த பாதிப்பும் இல்லாமல், வெற்றிகரமாக நடந்ததில் இவர்களும் முக்கிய பங்கு வகித்தனர்.
இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில், ஹாசன் மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் கவிதா தங்களின் சொந்த செலவில், ஒப்பந்த பணியாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் நேற்று முன்தினம், ஸ்டார் ஹோட்டலில் விருந்து கொடுத்து கவுரவித்தனர்.
பொதுவாக துாய்மை பணியாளர்களுக்கு, கேட்டரிங் மூலமாக உணவு வரவழைக்கப்படும். அதே போன்று இம்முறையும் உணவு வரும் என, பணியாளர்கள் நினைத்தனர்.
ஆனால் அதிகாரிகள், வெளியில் இருந்து உணவு வரவழைக்காமல், ஹாசன் நகரில் உள்ள ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்து சென்று, அற்புதமான விருந்து கொடுத்தனர்.
இதை பணியாளர்கள் எதிர்பார்க்கவில்லை. இவர்கள் ஹோட்டலுக்கு சென்ற போது, சிறப்பான முறையில் வரவேற்பும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் அவர்கள் மகிழ்ந்தனர்.
ஹாசன் மாநகராட்சி அதிகாரிகளின் செயலுக்கு, பாராட்டு குவிகிறது. உழைக்கும் வர்க்கத்தினரை கவுரவித்தது, மற்றவருக்கு முன் மாதிரியாகும் என, பொதுமக்கள் பாராட்டினர்.

