/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மூதாட்டியை கொன்று செயினை கொள்ளையடித்த தம்பதி கைது
/
மூதாட்டியை கொன்று செயினை கொள்ளையடித்த தம்பதி கைது
ADDED : நவ 07, 2025 05:37 AM

சுப்பிரமணியபுரா: மூதாட்டியை கொன்று தங்க செயினை கொள்ளையடித்து சென்ற, வாடகைக்கு வசித்த தம்பதி கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு உத்தரஹள்ளி நியூ மில்லினியம் பள்ளி சாலையில் வசிப்பவர் அஸ்வத் நாராயண், 67. இவரது மனைவி ஸ்ரீ லட்சுமி, 65. காட்டன்பேட்டில் உள்ள அகர்பத்தி தொழிற்சாலையில் வேலை செய்யும் அஸ்வத் நாராயண், கடந்த 4ம் தேதி வழக்கம்போல வேலைக்கு சென்றார்.
வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீ லட்சுமியை கொலை செய்து, அவர் அணிந்திருந்த தாலி செயினை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஸ்ரீலட்சுமிக்கு நன்கு தெரிந்தவர்களே அவரை கொலை செய்தது தெரிந்தது. அஸ்வத் நாராயணுக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசிக்கும் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த, பிரசாத் ஸ்ரீசைல் மகாய், 26, சாக் ஷி ஹனுமந்தப்பா, 23 ஆகியோரை, சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து, நேற்று முன்தினம் போலீசார் விசாரித்தனர்.
ஸ்ரீ லட்சுமியை கொலை செய்ததை இருவரும் ஒப்பு கொண்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பிரசாத்துக்கு, 20 லட்சம் ரூபாய் கடன் இருந்தது. கட்டட வேலை செய்யும் அவரால் கடனை அடைக்க முடியவில்லை. இதனால் அவரது மனைவி சாக் ஷியும், ஜுவல்லரி கடைக்கு வேலைக்கு சென்றார்.
இருந்தாலும் கடனை அவர்களால் செலுத்த முடியவில்லை.
கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால், ஸ்ரீலட்சுமி வீட்டில் திருட முடிவு செய்தனர். கடந்த ஒரு வாரமாக ஸ்ரீலட்சுமியை கண்காணித்து, அவரது கணவர் வேலைக்கு சென்ற பின், வீட்டிற்குள் புகுந்து தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்ததும், தாலி செயினை திருடி சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

