ADDED : மே 06, 2026 04:08 AM
சி.கே.அச்சுக்கட்டு: முதலாளி வீட்டில் திருடிய தம்பதி கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து, 43 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு சி.கே.அச்சுக்கட்டுவில் வசிப்பவர் மல்லிகார்ஜுன் நாயுடு; தொழிலதிபர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நான்கு மாத கைக்குழந்தையுடன், மல்லிகார்ஜுன் வீட்டிற்கு, ஒரு தம்பதி வேலை கேட்டு வந்தனர். தங்களை மணிகண்டன், 26, ஐஸ்வர்யா, 21 என அறிமுகப்படுத்தி கொண்டனர்.
அவர்கள் மீது கருணை காட்டிய மல்லிகார்ஜுன், தம்பதிக்கு வேலையும், அவர்கள் தங்க வீடும் ஏற்பாடு செய்து கொடுத்தார். இந்நிலையில் வேலை செய்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தம்பதி கொஞ்சம், கொஞ்சமாக நகைகள், வெள்ளி பொருட்கள், பணத்தை திருட ஆரம்பித்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மல்லிகார்ஜுன் குடும்பத்தினர் அலமாரியில் இருந்த நகை, வெள்ளி பொருட்களை சரிபார்த்த போது திருடப்பட்டது தெரிந்தது. தம்பதியிடம் கேட்ட போது அவர்கள் மழுப்பலாக பதில் அளித்தனர். சந்தேகம் அடைந்த மல்லிகார்ஜுன், சி.கே.அச்சுக்கட்டு போலீசில் புகார் செய்தார்.
தம்பதியிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் நகை, வெள்ளி பொருட்கள், பணத்தை திருடியதை ஒப்பு கொண்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். தம்பதியின் உறவினர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 199 கிராம் தங்க நகை, 730 கிராம் வெள்ளி பொருட்கள், 13.20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 42.89 லட்சம் ரூபாய் ஆகும்.
