ADDED : ஜூலை 23, 2026 11:08 PM
பெங்களூரு: முதிய தம்பதி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
பெங்களூரின், மஞ்சுநாதநகரில் வசித்தவர் ஈஸ்வர் ஆச்சாரி, 73. இவரது மனைவி கவுரி, 66. இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி, தனியே வசிக்கின்றனர். ஈஸ்வர் ஆச்சாரி, கவுரி தம்பதி தனியாக வசித்தனர்.
இருவருக்கும் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இருந்தது.
சில மாதங்களுக்கு முன், கவுரி உடல் நிலை பாதிக்கப்பட்டு இடுப்பு செயலிழந்தது.;படுத்த படுக்கையாக இருந்தார். நாளுக்கு நாள் அவரது உடல் நிலை மோசமானது.
இவரது மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளை, இரண்டு மகள்களும் செய்தனர்.
தங்களுக்கு வயதானதால், மகள்களுக்கு சுமையாக இருக்கிறோம் என, தம்பதி மனம் வருந்தினர். யாருக்கும் கஷ்டம் கொடுக்கக் கூடாது என நினைத்த ஈஸ்வர் ஆச்சாரியும், அவரது மனைவியும், நேற்று முன் தினம் இரவு, பழச்சாறில் விஷம் கலந்து குடித்து படுத்தனர்; உறக்கத்திலேயே இறந்தனர்.
மகள்களில் ஒருவர், நேற்று காலை பெற்றோருக்கு போன் செய்தார். பலமுறை அழைத்தும் எடுக்கவில்லை. சந்தேகமடைந்த அவர், வீட்டுக்கு வந்து பார்த்த போது, தாயும், தந்தையும் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
இது குறித்து, பசவேஸ்வர நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
