/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தம்பதியை கட்டி போட்டு ரூ.9 லட்சம் நகை கொள்ளை
/
தம்பதியை கட்டி போட்டு ரூ.9 லட்சம் நகை கொள்ளை
ADDED : செப் 07, 2025 10:54 PM

தாவணகெரே : வீட்டுக்குள் புகுந்த முகமுடி கும்பல், முதிய தம்பதியை கட்டி போட்டு, 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாவணகெரே மாவட்டம், சென்னகிரி தாலுகாவின் காகநுாரா கிராமத்தில் வசிப்பவர் மாதப்பா, 62. இவரது மனைவி சாவித்ரம்மா, 60. நேற்று முன்தினம் இரவு, உணவு முடிந்த பின் மாதப்பா உறங்க சென்றார். அவரது மனைவி ஹாலில் அமர்ந்து 'டிவி' பார்த்து கொண்டிருந்தார். முன் வாசல் கதவு திறந்திருந்தது. அப்போது முகமூடி அணிந்த ஐந்து மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர்.
அவர்களில் இருவர் கத்தியை காண்பித்து, சத்தம் போடக்கூடாது என்று மிரட்டினர். மாதப்பா அணிந்திருந்த வேட்டியை கழற்றி, கிழித்து அவரது கை, கால்களை கட்டினர். சாவித்ரம்மாவை கன்னத்தில் அறைந்து, அவர் அணிந்திருந்த 30 கிராம் எடை கொண்ட தாலிச்செயினை பறித்தனர்,
அதன்பின் அறைக்குள் அழைத்து சென்று, பீரோவில் இருந்த 8.85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அபகரித்தனர். பீரோவில் இருந்த பத்திரங்களை வெளியே எடுத்து வீசினர். தம்பதியை அறைக்குள் அடைத்துவிட்டு தப்பியோடினர்.
சிறிது நேரத்துக்கு பின், வெளியே சென்றிருந்த மாதப்பாவின் மகன் விகாஷ், மருமகன் சந்தோஷ் வீட்டுக்கு வந்த போது, கொள்ளை நடந்தது தெரிந்தது. இது குறித்து, சந்தேபென்னுார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசாரும் விசாரிக்கின்றனர்.