ADDED : செப் 20, 2026 11:18 PM
மாண்டியா: மாவட்ட மருத்துவ மனையில் கைதிக்கு ராஜ உபசரிப்பு அளிக்கப்பட்டது தொடர்பாக, 10 பேர் மீது துணை லோக் ஆயுக்தா, தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கபட்டணாவில் அரசு நில ஆவணங்களை போலி ஆவணங்களாக தயாரித்து மோசடி செய்த வழக்கில், முகமது உசேன் கைது செய்யப்பட்டார். இவர், நீதிமன்ற காவலில் உள்ளார்.
இதற்கிடையில், கடந்த ஆக., 24ல் மாண்டியா மாவட்ட முதன்மை நீதிபதி சந்திரசேகர், சட்ட சேவைகள் ஆணைய உறுப்பினர் சசிதர் ஷெட்டி மற்றும் அதிகாரிகள் மாவட்ட மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, கைதி முகமது உசேனுக்கு எந்த உடல்நல பாதிப்பும் இல்லாதபோதும், நீதிமன்ற அனுமதியின்றி, மருத்துவமனையின் சிறப்பு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அத்துடன், அவரது காதலியும் உடன் இருந்ததை கண்டறிந்தனர்.
இதையடுத்து, கைதிக்கு சொகுசு வசதி செய்ததற்காக, மாண்டியா மாவட்ட சிறை கண்காணிப்பாளர் சாந்தம்மா, பல்லாரி சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கிடையில், மாண்டியா மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் உட்பட 10 பேர் மீது கர்நாடக உப லோக் ஆயுக்தா, தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
இவ்வழக்கு லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா முன் விசாரணைக்கு வந்தபோது, 'அக்., 28ம் தேதி ஒத்தி வைத்து, உரிய ஆவணங்களுடன் அதிகாரிகள் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டார்.
