/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலா தொடர்பாக பொய் புகார் அளித்தவர் கைது 10 நாள் எஸ்.ஐ.டி., காவலில் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி
/
தர்மஸ்தலா தொடர்பாக பொய் புகார் அளித்தவர் கைது 10 நாள் எஸ்.ஐ.டி., காவலில் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி
தர்மஸ்தலா தொடர்பாக பொய் புகார் அளித்தவர் கைது 10 நாள் எஸ்.ஐ.டி., காவலில் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி
தர்மஸ்தலா தொடர்பாக பொய் புகார் அளித்தவர் கைது 10 நாள் எஸ்.ஐ.டி., காவலில் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி
ADDED : ஆக 24, 2025 05:33 AM

தட்சிண கன்னடா: தர்மஸ்தலாவில் நுாற்றுக்கணக்கான பெண் சடலங்கள் புதைக்கப்பட்டதாக பொய் புகார் அளித்தவரை எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். அவரிடம் 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க எஸ்.ஐ.டி.,க்கு, பெல்தங்கடி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம், பெல்தங்கடி மாவட்டத்துக்கு முகமூடி அணிந்த நபர், தன் வக்கீல்களுடன், கடந்த ஜூலை 3ம் தேதி நீதிமன்றத்திற்கு சென்று, பிரிவு 164ன் கீழ், நீதிபதி முன்னிலையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
அதில், 'தர்மஸ்தலா கோவிலில் 1995 - 2012 வரை நான் பணியாற்றிய காலகட்டத்தில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை, என் மேற்பார்வையாளர் உத்தரவின்படி நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைத்தேன். புதைக்கப்பட்ட பெண்கள், என் கனவில் தோன்றியதால் மனசாட்சி உறுத்தியது. தற்போது உண்மையை சொல்ல வந்துள்ளேன்' எனக் கூறி, சில எலும்பு கூடுகள், மண்டை ஓடுகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இது கர்நாடகாவை மட்டுமின்றி, தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, பெல்தங்கடி போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவானது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா உட்பட சிலரின் அழுத்தத்தால், இவ்விவகாரம் குறித்து விசாரிக்க கர்நாடக அரசு எஸ்.ஐ.டி., அமைத்தது.
உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி தலைமையில் 20 பேர் கொண்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நேத்ராவதி ஆற்றின் கரையோரம், புகார்தாரர் அடையாளம் காட்டிய இடங்களில் தோண்டப்பட்டன. 17 இடங்களில் தோண்டியபோது இரண்டு இடங்களில் மட்டுமே எலும்புக்கூடுகள் சிக்கின. இவை, ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உண்மை இதற்கிடையில், எதிர்க்கட்சியான பா.ஜ.,வினர், அரசை கேள்விகளால் துளைத்தெடுத்தனர். இதனால் விழிப்பிதுங்கிய அரசு, புகார்தாரரிடம் தீவிர விசாரணை நடத்தும்படி எஸ்.ஐ.டி.,க்கு உத்தரவிட்டது. இதையடுத்து அவரிடம் எஸ்.ஐ.டி., அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், 'தர்மஸ்தலா கோவிலில் செய்து வந்த வேலையிலிருந்து விலகி, தமிழகத்துக்கு சென்றுவிட்டேன். 2023 டிசம்பரில் சிலர் என்னை சந்தித்தனர். 'தர்மஸ்தலா கோவில் அருகில், சட்ட விரோதமாக கொலை செய்யப்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக, போலீசில் தெரிவிக்க வேண்டும்' என அழுத்தம் கொடுத்தனர். நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மண்டை ஓடுகளும், அவர்கள் கொடுத்தது தான்' என கூறி, அதிர்ச்சி அளித்தார்.
நேற்று முன்தினம் மீண்டும் முகமூடி அணிந்த நபரிடம், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சாட்சியாக இருந்த அவரை, வழக்கின் குற்றவாளியாக்கி, நேற்று அவரை கைது செய்தனர்.
இதற்கிடையில், கைதானவர் பற்றிய ரகசியங்கள் அம்பலமாகி உள்ளன. அவர், மாண்டியா மாவட்டம், சிக்கபள்ளி கிராமத்தை சேர்ந்த சின்னய்யா என்பது தெரிய வந்துள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பரிசோதனை செய்யப்பட்டது.
பின், அவர் பெல்தங்கடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க எஸ்.ஐ.டி.,க்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து, அவரை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
அதேவேளையில், சின்னையாவின் மூத்த சகோதரரையும், விசாரணைக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.
புகார் வாபஸ் இதேபோல், தன் மகளான அனன்யா பட் காணவில்லை என்று சின்னய்யாவுக்கு முன்பு சுஜாதா பட் என்பவர் புகார் கூறியிருந்தார். தன் மகள் படத்தை அவர் வெளியிட்டிருந்தார். ஆனால் அது அவரின் மகளே இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் சுஜாதா கூறியதும் பொய் என்பது அம்பலமானது.
இதுதொடர்பாக சுஜாதா பட்டிடம் கேட்டபோது, 'புகாரை வாபஸ் பெறப்போவதாகவும், எஸ்.ஐ.டி.,யினர் நோட்டீஸ் அனுப்பினால் விளக்கம் அளிப்பேன்' என்றும் கூறியிருந்தார்.
'அவ்வாறு புகாரை வாபஸ் வாங்குவதாக எந்த தகவலும் இல்லை' என, எஸ்.ஐ.டி., வட்டாரங்கள் கூறின.
அதேவேளையில், பா.ஜ., தேசிய பொதுச் செயலர் சந்தோஷ் குறித்து அவதுாறாக பேசிய மகேஷ் ஷெட்டி தம்மரோடி, சுஜாதா பட்டிற்கு இரண்டு நாட்கள் அடைக்கலம் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம், தர்மஸ்தலா கோவிலுக்கு களங்கம் ஏற்படுத்த சதி நடந்திருப்பது அம்பலாகி உள்ளது.
சாட்சியும், புகார்தாரருமான முகமூடி அணிந்த நபர் கைது செய்யப்பட்டது, உண்மை தான். தற்போது எஸ்.ஐ.டி.,யினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கொண்டு எந்த தகவலையும் தற்போது கூற முடியாது. சுஜாதா பட் வழக்கு குறித்தும் எதையும் பேச முடியாது. எஸ்.ஐ.டி.,யின் இறுதி அறிக்கை கிடைக்கும் வரை எதையும் சொல்வதற்கில்லை. - பரமேஸ்வர், உள்துறை அமைச்சர்
முகமூடி அணிந்த நபரின் குடும்பத்தினர், முதல்வரை சந்தித்து, 'சரியாக பணியாற்றி வருகிறீர்கள்' என்று கூறியுள்ளனர். சட்டசபையில் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா கேள்வி எழுப்பியபோதும் கூட, நான் எதுவும் பேசவில்லை. மதத்தின் மீது அரசியல் செய்யக்கூடாது. தவறான தகவல் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வரும், உள்துறை அமைச்சரும் கூறி உள்ளனர். நீதி, ஆன்மிகத்துக்கு ஆதரவாக நிற்பேன். - சிவகுமார், துணை முதல்வர்
தற்போது உண்மை ஒவ்வொன்றாக வெளியே வருகிறது. என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து சுத்தமாக வெளியே வந்துள்ளேன். தற்போது விசாரணை நடந்து வருவதால், மேற்கொண்டு எதுவும் கூற விரும்பவில்லை. உங்களின் ஆசி, நம்பிக்கை தொடர வேண்டும். - வீரேந்திர ஹெக்டே, தர்மாதிகாரி, தர்மஸ்தலா கோவில்.
தர்மஸ்தலா கோவில் மீது வேண்டுமென்றே பொய் புகார் கூறப்பட்டுள்ளது என்று ஆரம்பம் முதலே கூறி வருகிறோம். ஆனால் கர்நாடக அரசு, எஸ்.ஐ.டி.,யை அமைத்தது. தற்போது பொய் புகார் அளித்ததாக, மூகமுடி அணிந்த நபர் ஒப்புக் கொண்டார். முதல்வருக்கு பொது அறிவு கூட இல்லை. இவரின் முடிவால் தர்மஸ்தலா பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். இதை முதல்வரால் திருப்பித் தர முடியுமா? முன்னரே முகமூடி அணிந்த நபர் குறித்து விசாரித்திருந்தால், எப்போதோ இப்பிரச்னை முடிவுக்கு வந்திருக்கும். - அசோக், எதிர்க்கட்சி தலைவர், சட்டசபை