தர்ஷன் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், நீதிபதி மாற்றம்
தர்ஷன் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், நீதிபதி மாற்றம்
ADDED : மே 25, 2026 10:27 PM

பெங்களூரு: கொலை வழக்கில் சிறையில் உள்ள நடிகர் தர்ஷன் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், நீதிபதி மாற்றப்பட உள்ளது.
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கவுடா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த தர்ஷன், பவித்ரா உட்பட 6 பேருக்கு கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இதனை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தர்ஷன் உட்பட 6 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமினை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி ரத்து செய்தது. இதனால் தர்ஷன் உட்பட 6 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜாமின் கேட்டு தர்ஷன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கை விசாரிக்கும் பெங்களூரு 57வது சிட்டி சிவில் நீதிமன்றம் 2027ம் ஆண்டு மே மாதத்திற்குள் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்காவிட்டால், தர்ஷன் ஜாமின் கேட்டு மனு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறி இருந்தது .
இந்நிலையில், கர்நாடக அரசு சில நீதிமன்றங்களின் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை மறு வரையறை செய்துள்ளது.
இதனால், ரேணுகாசாமி கொலை வழக்கு நடக்கும் காமாட்சிபாளையா போலீஸ் நிலையம் தற்போது பெங்களூரு 59வது சிட்டி சிவில் நீதிமன்ற எல்லைக்குள் வந்துள்ளது.
இதனால், தர்ஷன் வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட உள்ளது. வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி சுஜாதா மடிவாளப்பா நியமிக்கப்பட்டு உள்ளார்.
இன்னும் ஓராண்டிற்குள் விசாரணையை முடிக்க வேண்டி இருப்பதால் வாரத்தில் இரண்டு அல்லது நான்கு நாட்கள் விசாரணை நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
