/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாணவர் பூணுால் விவகாரம் அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்
/
மாணவர் பூணுால் விவகாரம் அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்
ADDED : ஏப் 27, 2025 05:01 AM
பெங்களூரு : பூணுால் விவகாரத்தில் அகில கர்நாடக பிராமணர் மஹா சபை தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் சி.இ.டி., நுழைவு தேர்வு இம்மாதம் 16, 17ம் தேதிகளில் நடந்தது. தேர்வு மையத்தில் இருந்த அதிகாரிகள், பூணுால் அணிந்திருந்த சில மாணவர்களிடம் பூணுாலை அகற்றும்படி கூறினர். இதற்கு மாணவர் மறுத்ததால், அவரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இது நாடு முழுதும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது.
பொதுநல மனு
அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அகில கர்நாடக பிராமணர் மஹாசபை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது:
கர்நாடகாவில் பல்வேறு தொழில்முறை கல்வி படிப்பில் சேர, இம்மாதம் 16, 17ம் தேதிகளில் நடந்தது. பீதர், ஷிவமொக்கா, தார்வாட் மாவட்டங்களில், தேர்வு மையத்துக்கு நுழையும் முன், மாணவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அப்போது மாணவர்கள் அணிந்திருந்த பூணுாலை, அவர்களின் எதிர்ப்பை மீறி வலுக்கட்டாயமாக அகற்றி உள்ளனர். அதை அகற்றாத மாணவர்களை தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டனர்.
பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் அணிந்த பூணுாலை வலுக்கட்டாயமாக அகற்றி, அவர்களின் மத நம்பிக்கையை புண்படுத்தி உள்ளது. இது அரசியலமைப்பின் பிரிவுகள் 21 ஏ, 25, 29 (2)ஐ மீறியது தெளிவாகிறது.
நடவடிக்கை
அரசியலமைப்புக்கு எதிராக செயல்பட்ட அதிகாரிகள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுபோன்று, இது மாணவர்களின் கல்வி உரிமையை மீறுவதாகும்.
அத்துடன், தேர்வு எழுத முடியாத மாணவர்கள், சி.இ.டி., தேர்வு நடத்த கர்நாடக தேர்வு ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இத்தேர்வு எழுத வரும் மாணவர்களை பரிசோதிக்க, பொருத்தமான வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும்.
பூணுால் அணிந்த மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கும் நடவடிக்கை, அரசியலமைப்புக்கு விரோதமானது, ஒரு தலைபட்சமானது, சட்ட விரோதமானது என்று அறிவிக்க வேண்டும். பூணுால் அணியும் மாணவர்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது. அவர்களின் மத உணர்வில் தலையிடாமல் இருக்க தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இம்மனு, தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அரவிந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வருத்தம்
இருதரப்பு வாதங்களை கேட்டு நீதிபதிகள் கூறியதாவது:
தேர்வு அறைக்குள் மாணவர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது; தேர்வு எழுத முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்களும் இல்லை; மாணவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதற்கு மேலும் ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. குறைந்தபட்சம் மாணவர்களின் பெயரையாவது கொடுங்கள். குற்றச்சாட்டுகள் தீவிரமானது; எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இம்மனு தொடர்பாக மாநில அரசுக்கும், கர்நாடக தேர்வு ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இவ்வழக்கு விசாரணை, ஜூன் 9ம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.