ADDED : ஏப் 14, 2025 07:08 AM
* ஓட்டுனர் தற்கொலை
பெலகாவி நகரின், ஷஹாபுராவில் வசித்த ஓம்கார் பவார், 25, தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றினார். இவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது. நான்கு மாதங்களாக, மருத்துவமனையினர் ஊதியம் கொடுக்காமல் இழுத்தடித்தனர். பல முறை கேட்டும் பயன் இல்லை. இதனால் மனம் நொந்த ஓம்கார் பவார், நேற்று காலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* இளைஞர் கொலை
பாகல்கோட், முதோல் அருகில் உள்ள மாலாபுரா கிராமத்தில், நேற்று முன் தினம் இரவு கோவில் திருவிழா நடந்தது. இதற்கு வேறு கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் சீலவந்தா, 19, பேனர் வைத்தார். இதை சகிக்காத உள்ளூர் இளைஞர்கள் கிழித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டு, மஞ்சுநாத் சீலவந்தாவை தாக்கினர். காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
* பல் மருத்துவ மாணவி தற்கொலை
பெங்களூரு, ஹெப்பாலில் வசித்த சவும்யா, 19, பல் மருத்துவ கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தேர்வு பயத்தில் இதற்கு முன் தற்கொலைக்கு முயற்சித்து, காப்பாற்றப்பட்டார். ஆனால் நேற்று மாலை, தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்டார்.
* தோட்டத்தில் தீ
பீதர், பால்கி நகரின் புறநகர் பகுதியில் உள்ள தோட்டத்தில், நேற்று மதியம் எதிர்பாராமல் தீப்பிடித்தது. தீ மளமளவென பரவியதில், ஆறு ஏக்கர் நிலத்தில் விளைந்திருந்த கரும்பு, பப்பாளி, பரங்கிக்காய், 120 மாங்கன்றுகள், 14 ஏக்கரில் சோளம் தீக்கிரையாகின. அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தினர்.
* தாய், மகன் கொலை
பெலகாவி, அதானியின் கொடகாநுார் கிராமத்தில் வசித்தவர் சந்திரவ்வா அப்பராய இச்சேரி, 62. இவரது மகன் விட்டலா, 43. நேற்று மதியம் வயலுக்கு வந்த தாயையும், மகனையும் மர்மகும்பல் மரக்கட்டையால் தாக்கி, கொலை செய்து விட்டு தப்பியது. மாலையில் இதை பார்த்த கிராமத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர். முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.
***