காஸ் சிலிண்டர் வெடிப்பு
பெங்களூரு ரூரல், நெலமங்களா தாலுகா என்.என்.டி., பகுதியில் வசித்து வந்தவர் மேகனா, 25. இவர், நேற்று காலையில் குளித்துக் கொண்டிருந்தபோது, சமையல் காஸ் கசிந்து, சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்தார்.
கல்லால் அடித்து கொலை
பெங்களூரு, நெலகதரஹள்ளியில் வசித்து வந்தவர் ரங்கநாத், 44. இவர், தன் நண்பர் ஆனந்துடன் சேர்ந்து கடந்த வியாழக்கிழமை பீன்யாவில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆனந்த், ரங்கநாத்தை கல்லால் தலையில் தாக்கினார். இதில், ரங்கநாத் உயிரிழந்தார்.
காதலர்கள் மீது தாக்கு
பெங்களூரு, பிரிகேட் சாலையில் உள்ள பப்பில் காதலர்களை பவுன்சர்கள் தாக்கினர். இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், கப்பன் பார்க் போலீசார், திரிபுராவை சேர்ந்த பவுன்சர் ஹிருதய் தேப்நாத், நேபாளத்தை சேர்ந்த தீபன் காத்ரி ஆகியோரை கைது செய்து, பின் போலீஸ் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.
மேற்கு வங்க நபர் கைது
மேற்கு வங்கத்தை சேர்ந்த மிதுன் சர்க்கார், 32. இவர் ஒன்பது ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வருகிறார். கடந்த 17ம் தேதி, தன் வீட்டிற்கு வந்த நபரிடம் கன்னடம், கன்னடர்கள் குறித்து அவதூறாக பேசினார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், நேற்று பொன்னஹள்ளி போலீசார் அவரை கைது செய்தனர்.
யானை தாக்கி இருவர் காயம்
குடகு, சித்தாபூர் அருகே உள்ள காபி தோட்டத்தில் நேற்று உள்ளூர்வாசிகளான பிரவீன், 30, ரகு, 42 இருவரும் வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். காட்டு யானை இருவரையும் தாக்கியதில், பலத்த காயம் அடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடரும் பசுக்கள் கடத்தல்
உரிகம் கென்னடிஸ் 3வது லைன் பகுதியில் இம்மாதம் 7ம் தேதி அதிகாலையில் பவித்ரன் என்பவருக்கு சொந்தமான பசு, ராபர்ட்சன்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள சஞ்சய் காந்தி நகரில் இம்மாதம் 15ம் தேதி சசிகலா என்பவருக்கு சொந்தமான இரு பசுக்கள், அதே பகுதியில் சிவா என்பவருக்கு சொந்தமான இரு பசுக்கள்; நேற்று முன்தினம் கோரமண்டல் ஓரியண்டல் வட்டத்தில் மூன்று பசுக்கள் கடத்தப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.