தவறி விழுந்து இளம்பெண் பலி
பெங்களூரு, மாதநாயகனஹள்ளியின் கடபகெரேவில் உள்ள பிட்னஸ் சென்டரில் வரவேற்பாளினியாக பணியாற்றியவர் ரக்ஷிதா, 20. இவர் நேற்று மாலை, இந்த சென்டரின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார். தவறி விழுந்தாரா, தற்கொலையா அல்லது யாராவது தள்ளி விட்டனரா என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் உயிரிழந்த தம்பதி
பல்லாரி, சிரகுப்பாவின் குடுதரஹாளா அருகில், நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்த பைக் மீது அரசு பஸ் மோதியது. பைக்கில் பயணம் செய்த பொம்மலாபுரா கிராமத்தின் நாகபூஷண், 35, அவரது மனைவி சந்தியா, 32, ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
தம்பதி தற்கொலை
ஷிவமொக்கா தீர்த்தஹள்ளியின் ஹல்யாபுரா கிராமத்தில் வசித்தவர் குன்டா நாயக், 72. இவரது மனைவி லட்சுமம்மா, 58. தம்பதி கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் புதிதாக வீடு கட்டியுள்ளனர். இதற்காக பல இடங்களில் கடன் வாங்கினர். கடன் சுமை அதிகரித்ததால், மனம் நொந்த தம்பதி, நேற்று அதிகாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
அன்னபாக்யா அரிசி பறிமுதல்
உடுப்பியின் மொளஹள்ளி கிராமத்தில் உள்ள கிடங்கில், அன்னபாக்யா அரிசி பதுக்கி வைத்துள்ளதாக புகார் வந்தது. இதையடுத்து நேற்று காலை, அங்கு சென்று சோதனை நடத்திய உணவுத்துறை அதிகாரிகள், கிடங்கில் பதுக்கப்பட்ட 8.45 குவிண்டால் அரிசியை மீட்டனர்.