சிறையில் இருந்து வந்தவர் கொலை
சிக்கமகளூரு, தரிகெரேவின், பாவினகெரே கிராமத்தில் வசித்தவர் சரண், 26. இவர் தன் மனைவி மேகனாவை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு, ஜாமினில் வெளியே வந்தார். நேற்று மதியம், பைக்கில் சென்றபோது, சரணை வழிமறித்த மர்ம கும்பல் அரிவாள், இரும்புத்தடியால் தாக்கி, கொலை செய்துவிட்டு தப்பியது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சாலை விபத்தில் ஒருவர் பலி
தாவணகெரே நகரின், வட்ட சாலையின், நவோதயா பள்ளி எதிரே, நேற்று மதியம் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் மோதியது. ஸ்கூட்டரில் பயணம் செய்த ஆர்.டி.ஓ., அதிகாரி திப்பேசாமி, 43, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சகோதரியின் மகனை கொன்றவர் கைது
பெங்களூரு, கும்பாரஹள்ளியின் விநாயகா லே - அவுட்டில் வசிப்பவர் நாகபிரசாத், 50. இவரது வீட்டில், அக்காவின் மகன் அமோக் கீர்த்தி, 14, வசித்து வந்தார். ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான அமோக், தினமும் மாமாவிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்தார். பணம் கேட்டதால் கோபமடைந்த நாகபிரசாத், அமோக் கீர்த்தியை கழுத்தை அறுத்து 4ம் தேதி கொலை செய்தார். அதன்பின் மெஜஸ்டிக்குக்கு சென்று நான்கு நாட்கள் தலைமறைவாக இருந்தார். வேறு இடத்துக்கு செல்ல பணம் இல்லாததால், நேற்று காலை சோழதேவனஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார்.
துமகூரு, குப்பியின், எம்.ஜி.சாலையில் தாசில்தாரின் குடியிருப்பு உள்ளது. அலுவலக வளாகத்தில் சந்தன மரங்கள் வளர்ந்துள்ளன. நேற்று அதிகாலை மர்ம நபர்கள், ஒரு சந்தன மரத்தை முக்கால் பாகம் வரை வெட்டி கடத்திச் சென்றனர். இதுகுறித்து அதிகாரிகள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

