பா.ஜ., தொண்டர் தற்கொலை
பெங்களூரு வயாலிகாவலில் வசித்தவர் வெங்கடேஷ், 55. டிராவல்ஸ் நிறுவனம் நடத்துகிறார். மல்லேஸ்வரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா ஆதரவாளர். நேற்று முன்தினம் இரவு தனது அலுவலகத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லாட்டரி டிக்கெட் வாங்கிய விவகாரத்தில், மூன்று பேர் பணம் கொடுக்காமல் ஏமாற்றியதால், வெங்கடேஷ் தற்கொலை செய்தது தெரிந்து உள்ளது.
14 பேர் மீது வழக்கு
பெங்களூரு ஆவலஹள்ளியில் வசிப்பவர் ராதா, 60. இவரது கணவர் கிருஷ்ணனுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் ஆவலஹள்ளி அருகே பந்தபுரா கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து சிலர் ஆக்கிரமித்தனர். இதுகுறித்து கேட்ட ராதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். ராதா அளித்த புகாரில், ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியர்கள் உட்பட 14 பேர் மீது ஆவலஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
சைபர் திருடி கைது
கேரளா ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர், 25 வயது இளைஞரிடம் டிஜிட்டல் கைது என்ற பெயரில் 20.50 லட்சம் ரூபாய் சைபர் மோசடி செய்யப்பட்டதாக ஆலப்புழா சைபர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
விசாரணையில், மோசடியில் ஈடுபட்டவர் மைசூரு சோகபுரத்தை சேர்ந்த சந்திரிகா, 21, என தெரியவந்தது. இதையடுத்து, சந்திரிகாவை கைது செய்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

