UPDATED : நவ 06, 2026 07:15 PM
ADDED : நவ 06, 2026 12:11 AM
தட்சிண கன்னடா: தற்கொலை செய்து கொள்ள, குமாராதாரா ஆற்றில் குதித்த பெண், முதலையால் உயிர் பிழைத்தார்.
உடுப்பியைச் சேர்ந்த, 30 வயது பெண், குடும்ப பிரச்னையால் மனம் வருந்தி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக தட்சிண கன்னட மாவட்டம், சுள்ளியாவில் உள்ள, பிரசித்தி பெற்ற குக்கே சுப்ரமண்யாவுக்கு வந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, இங்குள்ள குமாரதாரா ஆற்றின் பாலத்தில் இருந்து, நீரில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
அப்போது நீரில் இருந்த முதலை, அப்பெண்ணின் கையை கடித்தது. நீரில் விழுந்த உடனேயே முதலை கடித்ததால், பீதியடைந்த அவர், அலறி கூச்சலிட்டார். பெண்ணின் அலறலை கேட்டு, அந்த பகுதி மக்கள் ஓடி வந்தனர். மக்கள் கூட்டமாக வந்ததையும், அப்பெண்ணின் அலறல் சத்தத்தாலும் பீதியடைந்த முதலை, பெண்ணின் கையை விட்டு, நீரில் நீந்தியபடி சென்றுவிட்டது.
அதன்பின், நீரில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றினர். அங்கு வந்த போலீசார், பெண்ணை விசாரித்த போது, குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்து கொள்ள, நீரில் விழுந்ததை கூறினார். அவருக்கு அறிவுரை கூறிய போலீசார், பெண்ணின் குடும்பத்தினரை வரவழைத்து, பெண்ணை அனுப்பினர்.
குக்கே சுப்ரமண்யாவின் குமாரதாரா ஆற்றில் முதலைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஆற்றங்கரை, பாறைகள் மீது அவை படுத்திருந்த சம்பவங்கள், பலமுறை நடந்துள்ளன.
தற்போது அந்த முதலைகளில் ஒன்று, தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் உயிரை காப்பாற்ற மறைமுகமாக உதவி செய்துள்ளது.
