/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கனமழையில் மூழ்கிய பயிர்கள்: அரசு நிவாரணம் வழங்குமா?
/
கனமழையில் மூழ்கிய பயிர்கள்: அரசு நிவாரணம் வழங்குமா?
கனமழையில் மூழ்கிய பயிர்கள்: அரசு நிவாரணம் வழங்குமா?
கனமழையில் மூழ்கிய பயிர்கள்: அரசு நிவாரணம் வழங்குமா?
ADDED : அக் 23, 2025 11:14 PM

சிக்கமகளூரு: சிக்கமகளூரு, ஹாசன், தார்வாட் உள்ளிட்ட மாவட்டங்களில், கனமழையால் பயிர்கள் மூழ்கி இருக்கும் நிலையில், அரசு விரைவில் நிவாரணம் வழங்குமா என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கர்நாடகாவில், வடகிழக்கு பருவமழையால் கன மழை பெய்து வருகிறது. பெங்களூரு, ஹாசன், சிக்கமகளூரு, தார்வாட், பெலகாவி, விஜயநகர், சித்ரதுர்கா உட்பட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்கிறது.
தார்வாட் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த கனமழையால், தார்வாடில், 'பிசினஸ் காரிடர்' சாலையில் உள்ள துர்கதகேரி பகுதியில் நெடுஞ்சாலையில், 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தின் பல கிராமங்களில் விவசாய நிலங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. சோள பயிர் சேதம் அடைந்தது.
மலைநாடு மாவட்டங்கள் என்று அழைக்கப்படும் சிக்கமகளூரு, ஹாசன், குடகு, ஷிவமொக்காவிலும் காபி, பாக்கு தோட்டங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.
சிக்கமகளூரின் கடூர் தாலுகா கணபதிஹள்ளி கிராமத்தில், தொடர்ந்து பெய்த மழைக்கு சாலையின் நடுவில் பள்ளம் விழுந்தது. ஹாசனின் அரகலகூடு லக்கனஹள்ளி கிராமத்தை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் மக்கள் தவிக்கின்றனர். மழையால் சேதம் அடைந்த பயிருக்கு, அரசு விரைவில் நிவாரணம் வழங்குமா என்று, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
பெங்களூரில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. நேற்று காலை 8:30 மணி முதல் மாலை 6:45 மணி நிலவரப்படி கொப்பால் கரடகியில் 6.20 செ.மீ., விஜயநகரின் ஹெரேகெட்கலில் 5.40 செ.மீ., பெலகாவியின் இடகல்லில் 5.30 செ.மீ., கிட்டூரில் 4.64 செ.மீ., தார்வாட் பேலுாரில் 4.60 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய 3 கடலோர மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது. இங்கு 11.56 செ.மீ., முதல் 20.45 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பெலகாவி, தார்வாட், பாகல்கோட், ராய்ச்சூர், யாத்கிர், கலபுரகி, விஜயபுரா, சித்ரதுர்கா, தாவணகெரே, பல்லாரி, விஜயநகரா ஆகிய 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் 6.45 செ.மீ., முதல் 11.55 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பெங்களூரு, பெங்களூரு ரூரல், சாம்ராஜ்நகர், சிக்கபல்லாபூர், சிக்கமகளூரு, ஹாசன், குடகு, மாண்டியா, கோலார், மைசூரு, ராம்நகர், ஷிவமொக்கா, துமகூரு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

