சின்னசாமி மைதானத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரால் மாசடையும் கப்பன் பார்க் ஏரி
சின்னசாமி மைதானத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரால் மாசடையும் கப்பன் பார்க் ஏரி
ADDED : மே 06, 2026 04:04 AM

பெங்களூரு: சின்னசாமி மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால், கப்பன் பார்க் ஏரி மாசடைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெங்களூரின் மையப்பகுதியில் கப்பன் பார்க் அமைந்து உள்ளது. இது, மிக முக்கியமான சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இந்த பார்க்கில் அழகிய ஏரியும் உள்ளது. அதில், படகு சவாரி செய்ய அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், இந்த ஏரியில் சமீப காலமாக கழிவுநீர் கலந்து மாசடைந்து காணப்படுகிறது. இது, நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, கப்பன் பார்க் நடைபயிற்சியாளர் சங்கத்தினர் கூறியதாவது:
சின்னசாமி மைதானத்தில் கிரிகெட் போட்டிகள் நடக்கும் போது, அங்கிருந்து கழிவுநீர் திறந்து விடப்படுகிறது.
இது, நேரடியாக கப்பன் பார்க்கில் உள்ள ஏரியில் கலக்கிறது. அதனால், ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன; கடும் துர்நாற்றமும் வீசுகிறது.
பெங்களூரின் முக்கிய சுற்றுலா தலம் நாசமாவதை ஏற்று கொள்ள முடியாது. இப்பிரச்னை உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும்.
இவ்விவகாரத்தில், பெங்களூரு குடிநீர், வடிகால் வாரியம் மற்றும் தோட்டக்கலைத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
