/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நோய் பாதித்த யானையின் காது வெட்டி அகற்றம்
/
நோய் பாதித்த யானையின் காது வெட்டி அகற்றம்
ADDED : அக் 30, 2025 04:50 AM

ஷிவமொக்கா: ஷிவமொக்காவில் சக்ரேபைலு யானைகள் முகாமில், ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டிருந்த 'பாலண்ணா' யானையின் வலது காது முழுதும் வெட்டி அகற்றப்பட்டது.
ஷிவமொக்கா மாவட்டம், சக்ரேபைலு யானைகள் முகாமில், 25 யானைகள் உள்ளன. இந்த யானைகளை பார்க்க மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
இந்த முகாமில் உள்ள பாலண்ணா, சாகர், விக்ராந்த் உட்பட நான்கு யானைகள் நோயால் பாதிக்கப்பட்டிருந்தன. 'பாலண்ணா' யானையின் வலது காது 'சீழ்' படிந்து, கொஞ்சம், கொஞ்சமாக உதிர்ந்து வந்தது.
காதின் அருகில், 'கேங்கிரீன்' (நோய் அல்லது காயம் காரணமாக, உடலின் ஒரு பகுதியில், ரத்த ஓட்டம் தடைபட்டு, அப்பகுதி செயலிழந்துவிடும்) போன்ற காயம் காணப்பட்டது.
இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் பிரசன்னா படகர், ஹனுமந்தப்பா ஆலோசித்து, பெங்களூரில் இருந்து கால்நடை மருத்துவர் குழுவை வரவழைத்தனர்.
கடந்த மூன்று நாட்களாக யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளித்தும் காயம் குறையாமல், உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வாய்ப்பு இருப்பதை அறிந்தனர். இதையடுத்து, அதிகாரிகளிடம், யானையின் உயிரை காப்பாற்ற, காதை வெட்டி எடுக்க வேண்டுமென பரிந்துரைத்தனர். அதிகாரிகளின் உத்தரவுபடி, யானையின் வலது காது வெட்டி அகற்றப்பட்டது.
வனத்துறை அதிகாரி பிரசன்னா படகர் கூறுகையில், ''யானையின் உயிரை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் என்பதால், பெங்களூரை சேர்ந்த மருத்துவ குழுவினர், அதன் காதை வெட்டி எடுத்தனர். யானைக்கு இன்னும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதுபோன்று சிறிய காயத்தால் அவதிப்பட்டு வந்த சாகர் யானையும், குணமடைந்து விட்டது,'' என்றார்.

