/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
டிஜிட்டல் குற்றங்களை கட்டுப்படுத்த 'சைபர் கமாண்ட் சென்டர்' துவக்கம்
/
டிஜிட்டல் குற்றங்களை கட்டுப்படுத்த 'சைபர் கமாண்ட் சென்டர்' துவக்கம்
டிஜிட்டல் குற்றங்களை கட்டுப்படுத்த 'சைபர் கமாண்ட் சென்டர்' துவக்கம்
டிஜிட்டல் குற்றங்களை கட்டுப்படுத்த 'சைபர் கமாண்ட் சென்டர்' துவக்கம்
ADDED : ஏப் 11, 2025 06:50 AM
பெங்களூரு: கர்நாடகாவில் அதிகரிக்கும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநில அரசு, 'சைபர் கமாண்ட் சென்டர்' அமைத்துள்ளது. இத்தகைய சென்டர் அமைத்திருப்பது, நாட்டிலேயே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் இதுவரை, சி.ஐ.டி.,யில் சைபர் பிரிவு இருந்தது. அங்குள்ள போலீசாரே சைபர் குற்றங்களை விசாரணை நடத்தினர். தற்போது சைபர் குற்றங்களை விசாரணை நடத்த, 'சைபர் கமாண்ட் சென்டர்' அமைத்து, மாநில அரசு நேற்று முன் தினம் உத்தரவிட்டது.
இது குறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
அதிநவீன யுகத்தில், தொழில் நுட்பம் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் சைபர் குற்ற வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. கொள்ளை, வழிப்பறி உட்பட, மற்ற குற்றங்களை விட சைபர் குற்றங்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகின்றன.
கர்நாடகாவில், கடந்த நான்கு ஆண்டுகளில், 52,000 சைபர் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. சைபர் குற்ற வழக்குகள் பதிவாவதில், தென் மாநிலங்களிலேயே கர்நாடக முதல் இடத்தில் உள்ளது.
எனவே மாநிலத்தில் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த, 'சைபர் கமாண்ட் சென்டர்' அமைக்கும்படி, மாநில அரசிடம் டி.ஜி.பி., வேண்டுகோள் விடுத்தார். இதற்கு அரசும் சம்மதித்து, 'சைபர் கமாண்ட் சென்டர்' அமைத்து உத்தரவிட்டது.
தற்போது செயல்பட்டு வரும், 43 சி.இ.என்., (சைபர், எக்கனாமிக்ஸ், நார்கோடெக்) போலீஸ் நிலையங்களுக்கு, சைபர் குற்ற போலீஸ் நிலையங்கள் என, பெயர் சூட்டி சைபர் கமாண்ட் சென்டர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன.
இந்த போலீஸ் நிலையங்கள் கலால் சட்டம், லாட்டரி தடை சட்டம், சட்டவிரோத செயல்கள் கட்டுப்பாடு சட்டம் உட்பட பல்வேறு சட்டங்களின் கீழ், விசாரணை நடத்தலாம்.
சைபர் கமாண்ட் சென்டர் பிரிவுக்கு, நான்கு ஏ.சி.பி., க்கள் உட்பட, 193 அதிகாரிகள், ஊழியர்கள் பணியிடங்கள் வழங்கப்பட்டன. இந்த பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.