பயிற்சியாளர் இல்லாததால் சைக்கிள் வீரர்கள் பரிதவிப்பு
பயிற்சியாளர் இல்லாததால் சைக்கிள் வீரர்கள் பரிதவிப்பு
ADDED : மே 29, 2026 12:35 AM

- நமது நிருபர் -:
பெலகாவியில் சைக்கிள் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்சியாளரும், உரிய ஓடுதளமும் இல்லாததால், வீரர்கள் பரிதவித்து வருகின்றனர்.
பெலகாவி நகரின் மையப்பகுதியில் விளையாட்டு பள்ளி மற்றும் விடுதி அமைந்துள்ளது. இங்கு மல்யுத்தம், ஜூடோ, கைப்பந்து, தடகளம், சைக்கிளிங் ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சைக்கிள் தவிர, மற்ற விளையாட்டுகளுக்கு தனித்தனி பயிற்சியாளர்கள் உள்ளனர். இது, சைக்கிள் வீரர்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. இதற்கு முன் இருந்த பயிற்சியாளர்களின் ஒப்பந்தம், 2026 ஏப்., 30ம் தேதியுடன் முடிந்தது. நடப்பு ஆண்டுக்கான பயிற்சி, மே 1ம் தேதி முதல் துவங்கியது. ஆனால், இதுவரை சைக்கிள் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
மற்ற விளையாட்டுகளுடன் ஒப்பிடும்போது, சைக்கிள் போட்டியை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. இதை உறுதிபடுத்தும் வகையில், விளையாட்டு பள்ளியில் முறையான பயிற்சி நடவடிக்கை இல்லாததால், சைக்கிள் வீரர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
கடந்த 2023ல் இங்கு 22 சைக்கிள் விளையாட்டு வீரர்கள் இருந்தனர். தற்போது, 11 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களில் மூன்று பேர் மட்டுமே தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அது தவிர, விளையாட்டு பள்ளியின் சைக்கிள் வீரர்கள், பயிற்சி செய்வதற்கு தனியான தடம் எதுவும் இல்லை. எனவே, சைக்கிள் வீரர்கள் தினமும் மாவட்ட உள்ளரங்க மைதானத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளின் சேவை சாலைகளிலும் பயிற்சி செய்கின்றனர்.
இங்கு பயிற்சி செய்பவர்கள் பலரும் தேசிய, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றவர்கள். இருப்பினும் அவர்களால் எதிர்பார்க்கப்பட்ட முடிவுகளை பெற முடியவில்லை.
சைக்கிள் வீரர்கள் கூறியதாவது:
பயிற்சிக்கு நாங்கள் பயன்படுத்தும் பெரும்பாலான சைக்கிள்கள், நல்ல நிலையில் இல்லை. சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளுக்கு தயாராவதற்கு அவை பொருத்தமானவை அல்ல.அவை பழுதடைந்தால், பழுது பார்ப்பதற்கான உதிரி பாகங்கள், உள்ளூரில் கிடைப்பதில்லை. இப்படி இருக்கையில், எங்களால் எப்படி சா திக்க முடியும்.
இவ்வாறு கூறினர்.
சைக்கிள் பயிற்சியாளரை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. சைக்கிள் வீரர்களுக்கு தேவையான வசதிகள் விரைவில் செய்து தரப்படும். சீனிவாஸ் இணை இயக்குனர், இளைஞர் மேம்பாடு, விளையாட்டு துறை
