பாரில் சிலிண்டர் வெடித்து தீ 2 ஊழியர்கள் உடல் கருகி பலி
பாரில் சிலிண்டர் வெடித்து தீ 2 ஊழியர்கள் உடல் கருகி பலி
ADDED : ஜூன் 16, 2026 06:21 AM

மைசூரு: பிரபலமான பார் அண்டு ரெஸ்டாரென்ட் ஒன்றில், திடீரென தீப்பிடித்ததில் இருவர் கருகி பலியாகினர்.
மைசூரு நகரின், தட்டஹள்ளி நான்காவது ஸ்டேஜ் அருகில், 'பாக்ஸ் டென் லிக்கர் கேரேஜ்' என்ற பெயரில், பார் அண்டு ரெஸ்டாரென்ட் உள்ளது. நேற்று மதியம் ரெஸ்டாரென்டில், பார்ட்டி நடந்து கொண்டிருந்தது.
அப்போது சமையலறையில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் தீப்பிடித்தது. இது நொடிப்பொழுதில் கட்டடம் முழுதும் பரவியது. அடர்ந்த கரும்புகை படர்ந்ததால், ரெஸ்டாரென்ட் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மூச்சு விட முடியாமல் திணறினர்.
சிலர், தங்களின் உயிரை காப்பாற்றி கொள்ள, கட்டடத்தில் இருந்து குதித்ததில், கை, கால் முறிந்தது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், நீண்ட நேரம் போராடி, தீயை கட்டுப்படுத்தினர். ஆனால் அதற்குள் ரெஸ்டாரென்ட் ஊழியர்களான மேற்கு வங்கம், டார்ஜிலிங்கை சேர்ந்த ஷாஹின், 26, நேபாளை சேர்ந்த பிரகாஷ், 24, ஆகியோர் தீரில் கருகி இறந்தனர். பலர் காயமடைந்தனர்.
இவர்களும், கட்டடத்தில் இருந்து குதித்து காயமடைந்தவர்களும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். சிலரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
உயர் போலீஸ் அதிகாரிகள், சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர். விதிமுறைகளின் படி, தீ பாதுகாப்பு சாதனங்கள் உள்ளனவா, வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர்கள், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து, விசாரணையை துவக்கியுள்ளனர்.
