பிடதி டவுன்ஷிப் திட்டம் வேண்டாம்: ராகுலுக்கு விஜயேந்திரா, நிகில் கடிதம்
பிடதி டவுன்ஷிப் திட்டம் வேண்டாம்: ராகுலுக்கு விஜயேந்திரா, நிகில் கடிதம்
ADDED : ஜூன் 16, 2026 06:21 AM
பெங்களூரு: 'பிடதி டவுன்ஷிப் திட்டத்தை கைவிட சொல்லுங்கள்' என்று, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு, கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, ம.ஜ.த., இளைஞரணி தலைவர் நிகில் குமாரசாமி கடிதம் எழுதியுள்ளனர்.
ராம்நகரின் பிடதியில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் இயங்கும் டவுன்ஷிப் அமைக்கும் பணிக்காக, ஒன்பது கிராமங்களில் 7,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. முதல் கட்டமாக 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
ஒரு ஏக்கர் நிலத்திற்கு 2 கோடி ரூபாய் தருவதாக அரசு கூறியுள்ளது. ஆனால் விவசாயிகள் 5 கோடி முதல் 6 கோடி ரூபாய் வரை கேட்கின்றனர். இல்லாவிட்டால் நிலம் தர மாட்டோம் என்று, ஓராண்டாக அமைதியான முறையில் போராட்டம் நடத்துகின்றனர்.
டவுன்ஷிப் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டு இருப்பதால், விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அரசுக்கு எதிராக பேரணி, போராட்டங்கள் நடத்துகின்றனர். ஆனாலும் திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று, முதல்வர் சிவகுமார் பிடிவாதமாக உள்ளார்.
இந்நிலையில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு, கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, ம.ஜ.த., இளைஞரணி தலைவர் நிகில் குமாரசாமி ஆகியோர், டவுன்ஷிப் விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதி உள்ளனர்.
'கிரேட்டர் நிக்கோபர் திட்டத்தால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி, அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நீங்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிடதி டவுன்ஷிப் திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
'திட்டத்தை கைவிடும்படி, கர்நாடக முதல்வர் சிவகுமாரிடம் கூற வேண்டும். விவசாயிகள் போராட்டத்துக்கு செவிசாய்க்க வேண்டும். ஏழை, தலித், சிறு விவசாயிகள் நிலம் பறிக்கப்படுவதை தடுக்க வேண்டும்' என்பது உட்பட பல கருத்துகளை அதில் தெரிவித்துள்ளனர்.
