/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தலித் முதல்வர்! கர்நாடக காங்கிரசில் மீண்டும் கோஷம் 'முனியப்பா சரியானவர்' என்கிறார் பரமேஸ்வர்
/
தலித் முதல்வர்! கர்நாடக காங்கிரசில் மீண்டும் கோஷம் 'முனியப்பா சரியானவர்' என்கிறார் பரமேஸ்வர்
தலித் முதல்வர்! கர்நாடக காங்கிரசில் மீண்டும் கோஷம் 'முனியப்பா சரியானவர்' என்கிறார் பரமேஸ்வர்
தலித் முதல்வர்! கர்நாடக காங்கிரசில் மீண்டும் கோஷம் 'முனியப்பா சரியானவர்' என்கிறார் பரமேஸ்வர்
ADDED : அக் 28, 2025 04:30 AM

பெங்களூரு: கர்நாடக காங்கிரசில், 'தலித் முதல்வர்' என்ற கோஷம் மீண்டும் எழுந்துள்ளது. இதற்கு ஏற்ப, 'முதல்வர் பதவிக்கு அமைச்சர் முனியப்பா ஏற்றவர்' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் முதல்வர் சித்தாமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சித்தராமையாவுக்கு பின், சிவகுமார் முதல்வர் ஆவார் என, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும்; சித்தராமையாவே ஐந்து ஆண்டுகள் முதல்வராக தொடர்வார் என, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் கூறி வருகின்றனர். இதற்கு கட்சி தலைமை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதையும் மீறி பேசிய சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் இக்பால் உசேன், பசவராஜ் சிவகங்காவுக்கு, விளக்கம் கேட்டு கட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
யதீந்திரா அதிரடி இந்நிலையில், கடந்த வாரம் பெலகாவியில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா பேசுகையில், 'முதல்வர் பதவிக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தகுதியானவர்' என்று கொளுத்தி போட்டார்.
இதற்கு துணை முதல்வர் சிவகுமார், 'யதீந்திராவின் கருத்துக்கு இப்போது பதிலளிக்க மாட்டேன். பேச வேண்டிய இடத்தில் பேசுவேன். கட்சியின் உத்தரவுப்படி ஒழுக்கமாக நடக்கிறேன்' என்று கூறியிருந்தார்.
யதீந்திராவின் பேச்சால் எரிச்சலடைந்த சிவகுமார், கட்சி மேலிட தலைவர்களை சந்திக்க, நேற்று முன்தினம் டில்லி புறப்பட்டு சென்றுள்ளார். மீண்டும் நவம்பர் 11ம் தேதி டில்லி செல்லும் அவர், ராகுலை தனியாக சந்தித்து பேச உள்ளார். அத்துடன், ராகுலை சந்திக்கும் வரை, தனது ஆதரவாளர்களிடம், 'கட்சி மேலிடம் அதிருப்தி தெரிவிக்கும் வகையில் எதையும் பேச வேண்டாம்' என்றும் உத்தரவிட்டு உள்ளார்.
முதல்வர் பயணம் அவரை தொடர்ந்து, முதல்வர் சித்தராமையா, நவ., 14ம் தேதி டில்லி செல்கிறார். அன்று முதல் மூன்று நாட்கள் அங்கு தங்க உள்ளார். அப்போது சிவகுமாருக்கு, 'செக்' வைக்கும் வகையில், அமைச்சரவை மாற்றம், கூடுதல் துணை முதல்வர்கள் நியமனம், மாநில தலைவர் மாற்றம் குறித்து மேலிட தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருடன் ஆலோசிக்க உள்ளதாக கூ றப்படுகிறது.
சித்தராமையா, சிவகுமார் ஆகியோரின் திடீர் டில்லி பயணத்தால், நவம்பர் 15க்கு பிறகு மாநில அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மீண்டும் தலித் முதல்வர் என்ற கோஷத்தை, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் துவக்கி உள்ளார்.
பெங்களூரில் நேற்று பரமேஸ்வர் அளித்த பேட்டி:
அடுத்த முதல்வராக எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர் இருந்தால் நன்றாக இருக்கும். குறிப்பாக, உணவு பொது வினியோக துறை அமைச்சர் முனியப்பாவை முதல்வராக்கினால், நான் வரவேற்பேன்.
முதல்வரை மாற்றும் முடிவை கட்சி தலைமை தான் எடுக்கிறது. இங்கு அமர்ந்து முடிவெடுக்க முடியாது.
இவ்விஷயத்தில் பீஹார் தேர்தலுக்கு பின், அமைச்சரவை மாற்றமா அல்லது அதிகாரம் மாற்றமா என்பதை கட்சி தலைமை முடிவெடுக்கும். நிர்வாகத்தை விரைவுபடுத்த வேலை செய்ய வேண்டும். அமைச்சரவை மாற்றம் குறித்து யாரும் என்னிடம் கூறவில்லை.
சிவகுமார் பற்றி சொல்லும் திறன் எங்களிடம் இல்லை. அவரும் எங்கள் தலைவர். அவர் முதல்வராக வருவது பற்றி நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். நவம்பர் புரட்சி பற்றி எனக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
30 நாள் மட்டுமே பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறியதாவது:
தலித் முதல்வர் வாய்ப்பு வரும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டும். இன்னும் வாய்ப்பு வரவில்லை. இதற்கான வாய்ப்பு உருவாகும். இன்னும் 20 - 30 நாட்கள் மட்டுமே உள்ளன. என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.
நாங்கள் ம.ஜ.த.,வில் இருந்த காலத்தில் இருந்தே, 30 ஆண்டுகளாக 'அஹிந்தா'வின் ஒரு பகுதியாக உள்ளேன். என்னை போன்று அமைச்சர்கள் பரமேஸ்வர், மஹாதேவப்பா அனைவரும் அஹிந்தாவின் ஒரு பகுதியாக உள்ளோம்.
ஒருபோதும் முதல்வர் பதவியையோ அல்லது தலை வர் பதவியையோ யதீந்திரா கேட்டதில்லை. முதல்வர் பதவி பிரச்னை வேறு, யதீந்திரா கூறியது வேறு. அடுத்த சட்டசபை தேர்தல் முடிவுகளை பார்த்து, தீர்மானிப்போம். யார், என்ன செய்ய வேண்டும் என்பதை கட்சி உயர்மட்ட குழு முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்சி தலைமை முடிவு செய்தால், ஐந்து ஆண்டுகள் நானே முதல்வராக நீடிப்பேன். ஜனநாயக நாட்டில், யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம். முதல்வராவேன் என்று கூறலாம். அதேவேளையில் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். ஊடகத்தினர் தான் முதல்வர் மாற்றம் குறித்து பேசி வருகிறீர்கள். அதனால் தான் இவ்விஷயம் குறித்து பேச வேண்டி உள்ளது. - சித்தராமையா, முதல்வர்

