தர்ஷன் ரசிகர்கள் விமர்சனம் நடிகை ரம்யா கோர்ட்டில் ஆஜர்
தர்ஷன் ரசிகர்கள் விமர்சனம் நடிகை ரம்யா கோர்ட்டில் ஆஜர்
ADDED : மார் 11, 2026 05:30 AM

பெங்களூரு: நடிகர் தர்ஷன் ரசிகர்கள் ஆபாச கருத்து தெரிவித்த வழக்கில், நடிகை ரம்யா விசாரணைக்கு ஆஜரானார்.
கன்னட திரை உலகில் முன்னணி நடிகை ரம்யா. இவர், மாண்டியா தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பி., ஆவார். சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டது குறித்து, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட ரம்யா, சட்டம் தனது கடமையை செய்து உள்ளதாகவும், தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தர்ஷன் ரசிகர்கள் ரம்யாவை பற்றி, இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக கருத்து தெரிவித்தனர். ரம்யா அளித்த புகாரில், பெங்களூரு சி.சி.பி., போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆறு பேரை கைது செய்தனர். பின், அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கு பெங்களூரு 46வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடக்கிறது. நேற்று நடந்த விசாரணையில், ரம்யா நேரில் ஆஜராகி, நீதிபதி ராஜிவ் கவுடாவிடம் விளக்கம் அளித்தார்.
