அஞ்சனாத்ரி மலையில் தரிசன நேரம் மாற்றம் வெயில் வாட்டுவதால் நடவடிக்கை
அஞ்சனாத்ரி மலையில் தரிசன நேரம் மாற்றம் வெயில் வாட்டுவதால் நடவடிக்கை
ADDED : ஏப் 18, 2026 05:56 AM

கொப்பால்: கங்காவதி தாலுகாவின், பிரசித்தி பெற்ற அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயரை தரிசிப்பதற்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொப்பால் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கொப்பால் மாவட்டம், கங்காவதி தாலுகாவின் ஆனேகுந்தி அருகில் உள்ள அஞ்சனாத்ரி மலை வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
தற்போது, மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கொப்பால் மாவட்டத்தில் மிக அதிகமான வெப்பநிலை பதிவாகிறது. அஞ்சனாத்ரி மலையிலும் வெப்பம் அதிகரித்துள்ளது.
அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள், 575 படிகளில் ஏறிச் சென்று, ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டியுள்ளது. மலை ஏறுவதற்குள் வெப்பம் அதிகமாகிறது.
இது, பக்தர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. சோர்வடைந்து பலர் படிகளின் மீதே, மயங்கி விழுகின்றனர். சில பக்தர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதை மனதில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் அஞ்சனாத்ரி மலையில் ஏற, நேரம் நிர்ணயித்துள்ளது. காலை, 11:00 மணிக்குள்ளோ அல்லது, 4:00 மணிக்கு பின்போ, ஆஞ்சநேயரை தரிசிக் க அனுமதி அளிக்கப்படுகிறது.
மலைக்கு செல்லும் சிறார்கள், மூத்த குடிமக்களின் ஆரோக்கியம் முக்கியம். ஆரோக்கிய பிரச்னை உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மலை ஏறுவதற்கு முன், போதுமான அளவில் குடிநீரை எடுத்துச் செல்வது நல்லது. மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த நேரத்தில் மலைக்கு செல்லுங்கள்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
