தர்ஷன் மேல்முறையீட்டு மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணை
தர்ஷன் மேல்முறையீட்டு மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணை
ADDED : செப் 02, 2026 12:56 AM

பெங்களூரு: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், பிரதோஷ் 'அப்ரூவராக' மாற அனுமதி அளித்ததை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தர்ஷன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், கன்னட நடிகர் தர்ஷன் உட்பட, 17 பேர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர். இவர்களில் ஒருவரான பிரதோஷ், அப்ரூவராக மாற முடிவு செய்தார்.
இது தொடர்பாக, 59வது சிட்டி சிவில் கோர்ட்டில் மனு அளித்தார். இந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. பிரதோஷை அரசு தரப்பு சாட்சியாக கடந்த மாதம் 25ம் தேதி நீதிமன்றம் அறிவித்தது. அவரிடம் வாக்குமூலம் இன்று பெறப்படும் என உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து நடிகர் தர்ஷன் உயர் நீதிமன்றத்தில், மேல்முறையீட்டு மனு நேற்று தாக்கல் செய்தார்.
'பிரதோஷின் வாக்குமூலங்கள் முன்னுக்கு பின் முரணானவை. அவர் நம்பகத்தன்மை இல்லாதவர். அரசு தரப்பு சாட்சியாக மாறுவதற்கு அவர் சமர்ப்பித்த மனுவின் நகல், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வக்கீல்களுக்கு முறைப்படி சமர்ப்பிக்கப்படவில்லை. அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட வேண்டும்' என, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனுவை, நேற்று அவசரமாக விசாரிக்க கோரப்பட்டது. அதற்கு, நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, விசாரணையை இன்று ஒத்திவைத்தது.
