ADDED : பிப் 13, 2026 05:32 AM
துமகூரு: ஜோதிடரின் பேச்சை நம்பி, தன் தாயை கொலை செய்த மகள், போலீசாரிடம் சிக்கினார்.
துமகூரு நகரின், அனுபனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் புஷ்பாவதி, 55. இவரது மகள் சுசித்ரா, 33. சுசித்ரா திருமணமாகி, துமகூரு நகரின், ஸ்ரீநகரில் கணவருடன் வசிக்கிறார். புஷ்பாவதியின் கணவர் ஒன்றரை ஆண்டுக்கு முன் காலமானார்.
சமீபத்தில் சுசித்ரா, தன் தாய் வீடான அனுபனஹள்ளிக்கு வந்திருந்தார். இரண்டு நாட்களுக்கு முன், இரவு உறக்கத்தில் இருந்த தாயின் முகத்தில் தலையணை வைத்து அழுத்தி, கொலை செய்தார். அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் உடல் நிலை பாதிப்பால் தாய் இறந்ததாக நாடகமாடி, இறுதி சடங்குகள் நடத்தவும் தயாரானார். புஷ்பவதியின் உடலை பார்த்த கிராமத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனடியாக கியாத்சந்திரா போலீசாருக்கு, தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சுசித்ராவிடம் தீவிரமாக விசாரித்த போது, தாயை கொலை செய்தது அம்பலமானது.
கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், சுசித்ராவின் தந்தை காலமானார். சமீபத்தில் ஜோதிடர் ஒருவரை, சுசித்ரா சந்தித்தார். அப்போது ஜோதிடர், 'உங்கள் தந்தையின் இறப்புக்கு, தாய் புஷ்பாவதியே காரணம்.
'மாந்த்ரீகம் செய்து உங்கள் தந்தையை கொன்றுள்ளார்' என கூறினார். இதை உண்மையென நம்பிய சுசித்ரா, தாயை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். நேற்று சுசித்ராவை போலீசார் கைது செய்தனர்.
