ADDED : ஜூன் 06, 2026 11:34 PM
பெங்களூரு: பெற்ற மகளை கள்ளக்காதலருடன் சேர்ந்து, கொலை செய்து நாடகமாடி, தற்போது தலைமறைவாக உள்ள பெண்ணை, போலீசார் தேடுகின்றனர்.
பெங்களூரின், காடுகோடியில் வசிப்பவர் பிரவீன், 40. இவரது மனைவி பிரியங்கா, 37. தம்பதிக்கு 17 வயது மற்றும் 6 வயதில், இரண்டு மகள்கள் உள்ளனர். தம்பதி நெருக்கமாகவே இருந்தனர்.
இதற்கிடையே பிரியங்காவின் கல்லுாரி நண்பர் மோகனை ஒரு முறை சந்தித்தார். அதன் பின், இருவரும் அவ்வப்போது நேரில் சந்தித்து பேசினார். நாளடைவில், இது கள்ளத்தொடர்பாக மாறியது.
இந்த விஷயம் கணவர் பிரவீனுக்கு தெரிந்தது. மனைவியை கண்டித்தார். தம்பதிக்கிடையே தினமும் சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் தனக்கு விவாகரத்து அளிக்கும்படி, பிரியங்கா பிடிவாதம் பிடித்தார்.
கணவரை விட்டு பிரிந்து, காடுகோடியின் சீகேஹள்ளி வில்லாவில், மோகனுடன் வசிக்க துவங்கினார். இளைய மகள் வெண்ணிலா, 6,வை தன்னுடன் அழைத்து சென்றார்.
இந்நிலையில், மார்ச் 24ம் தேதியன்று, கணவருக்கு போன் செய்த பிரியங்கா, மகள் வெண்ணிலா இறந்து விட்டதாக கூறினார்.
அதிர்ச்சியடைந்த கணவர், மகள் எப்படி இறந்தார் என, விசாரித்த போது, பிரியாணி சாப்பிட கொடுத்தேன். அதன்பின் என்ன நடந்தது தெரியவில்லை என்றார். மற்றொரு முறை, ஐஸ்கிரீம் கொடுத்து 'ஏசி' காரில் அமர்த்தியிருந்தேன். திரும்ப வந்து பார்த்த போது, இறந்து கிடந்தார் என, மாற்றி கூறினார்.
மனைவியின் பேச்சால் சந்தேகமடைந்த பிரவீன், மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளது. விசாரணை நடத்தும்படி புகார் அளித்தார். போலீசாரும் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
ஏப்ரலில் அறிக்கை வந்தது. இந்த அறிக்கையை பிரவீன், வெளிநாட்டில் டாக்டராக உள்ள தன் உறவினருக்கு அனுப்பினார். அறிக்கையை ஆய்வு செய்த உறவினர், 'இது, இயற்கையான மரணமாக தெரியவில்லை. ஏதோ தவறு நடந்துள்ளது' என்றார்.
இதை கேட்டு வருத்தம் அடைந்த பிரவீன், தன் மகளை மனைவியே வயிற்றில் உதைத்து, கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என, போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார், பிரியங்கா மற்றும் மோகன் மீது, வழக்கு பதிவு செய்தனர். இது தெரிந்ததும் பிரியங்கா தலைமறைவானார். அவரது காதலர் மோகனை, போலீசார் கைது செய்தனர். இவரிடம் விசாரித்த போது, சிறுமியை தானும், பிரியங்காவும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
பிரியங்கா 2வது முறை கர்ப் பமான போது, ' குழந்தை சிவப்பாக, என்னை போன்று அழகாக இருக்க வேண்டும். கருப்பாக இருந்தால் நான் மவுனமாக இருக்கமாட்டேன்' என கூறியுள்ளார். மனைவி வேடிக்கைக்காக அப்படி கூறியதாக, பிரவீன் நினைத்தார்.
ஆனால் குழந்தை வெண்ணிலா, தன் தந்தை பிரவீ னை போல நிறம் குறைவாக இருந்தார். இது, பிரியங்காவுக்கு எரிச்சலை அளித்தது. மகளை கொலை செய்ய நிறமும் ஒரு காரணமாக இருக்கலாம் என, பிரவீன் கூறியுள்ளார்.
போலீசார் பிரியங்காவை தேடி வருகின்றனர்.
