/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வெள்ள பாதிப்பில் சிக்கும் வீட்டை 100 அடி பின்னால் நகர்த்த முடிவு
/
வெள்ள பாதிப்பில் சிக்கும் வீட்டை 100 அடி பின்னால் நகர்த்த முடிவு
வெள்ள பாதிப்பில் சிக்கும் வீட்டை 100 அடி பின்னால் நகர்த்த முடிவு
வெள்ள பாதிப்பில் சிக்கும் வீட்டை 100 அடி பின்னால் நகர்த்த முடிவு
ADDED : பிப் 13, 2025 05:20 AM

பெங்களூரு: வெள்ள பாதிப்பில் அடிக்கடி பாதிக்கப்படும் வீட்டை இடிக்காமல், 100 அடி பின்னுக்கு நகர்த்தும் பணி தீவிரமாக நடக்கிறது.
இன்றைய காலத்தில், பெற்றோர் கட்டிய பழைய வீட்டை, இடித்து தள்ளிவிட்டு மாடர்ன் ஆக கட்டி கொள்வோர் அதிகம். ஆனால் பிள்ளைகள், தங்கள் தாய்க்காக தந்தை கட்டிய பழைய வீட்டை இடிக்காமல், 'லிப்டிங்' செய்ய முடிவு செய்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
பெங்களூரில் மழை பெய்தால், பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறுகின்றன. மஹாதேவபுராவின், பி.இ.எம்.எல்., லே அவுட்டில் வசிக்கும் எல்லப்பா என்பவரின் வீட்டிலும் வெள்ளம் புகுந்தது. 2 முதல் 3 அடி வரை கழிவு நீர் தேங்கும்.
எனவே அவரது பிள்ளைகள், இந்த வீட்டை முழுதுமாக இடித்துவிட்டு, புதிதாக கட்ட முடிவு செய்தனர்.
ஆனால், தாய் சாந்தம்மா இதற்கு சம்மதிக்கவில்லை. 'நானும், உங்கள் தந்தையும் வாயை கட்டி, வயிற்றை கட்டி இந்த வீட்டை கட்டினோம். இதை இடிக்க வேண்டாம்' என, மன்றாடினார்.
எனவே வீட்டை இடிப்பதற்கு பதில், 'லிப்டிங்' செய்ய பிள்ளைகள் முடிவு செய்துள்ளனர். பீஹாரை சேர்ந்த ஸ்ரீராம் ஹவுஸ் லிப்டிங் அண்ட் ஷிப்பிங் நிறுவனத்தை தொடர்பு கொண்டனர். நிறுவனத்தினரும், 'வீட்டை 100 அடி பின்னுக்கு லிப்டிங் செய்து கொடுக்கிறோம்' என்றனர்.
லிப்டிங் அண்ட் ஷிப்பிங் நிறுவனம், பல்வேறு நகரங்களில் வீடுகளை வெற்றிகரமாக லிப்டிங் செய்துள்ளது.
இப்போது பெங்களூரில் இரண்டு மாடிகள் கொண்ட எல்லப்பா வீட்டை லிப்டிங் செய்ய உள்ளது. பெங்களூரில் வீடு லிப்டிங் செய்வது, இதுவே முதன் முறை என கூறப்படுகிறது.
வீட்டை லிப்டிங் செய்ய 200 இரும்பு ஜாக்கிகள், 100 இரும்பு ரோலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வீட்டை கட்ட 13 லட்சம் ரூபாய் செலவிட்டனர்.
தற்போது வீட்டை 15 அடி பின்னுக்கு லிப்டிங் செய்துள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில், 85 அடி பின்னுக்கு கொண்டு செல்லப்படும். வீட்டை லிப்டிங் செய்ய ஸ்ரீராம் நிறுவனத்துக்கு, 10 லட்சம் ரூபாய் கட்டணம் கொடுத்துள்ளனர்.
சாந்தம்மா கூறுகையில், ''நான் வீதி, வீதியாக கீரை விற்றும், என் கணவர் கிடைத்த வேலை செய்தும் இந்த வீட்டை கட்டினோம். ஆனால், மழை காலத்தில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து, கஷ்டப்படுவோம். தற்போது என் பிள்ளைகள், வீட்டை இடிக்காமல், 100 அடி பின்னுக்கு இடம் மாற்றுவது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.

