விரைவில் பெங்களூரு, மைசூரு, கலபுரகியில் செயற்கை கருத்தரிப்பு மையங்களை திறக்க முடிவு
விரைவில் பெங்களூரு, மைசூரு, கலபுரகியில் செயற்கை கருத்தரிப்பு மையங்களை திறக்க முடிவு
ADDED : மே 28, 2026 03:00 AM

பெங்களூரு: ஹூப்பள்ளியின், கிம்ஸ் மருத்துவமனையை தொடர்ந்து, பெங்களூரு, கலபுரகி மற்றும் மைசூரில் செயற்கை கருத்தரிப்பு மையங்களை திறக்க, கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் கூறியதாவது:
ஹூப்பள்ளியின் கிம்ஸ் மருத்துவமனையில், கர்நாடகாவின் முதல், அரசு சார்ந்த, செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இம்மையம் திறக்கப்படும்.
அதுபோல, பெங்களூரின் வாணி விலாஸ் மருத்துவமனை, சிவாஜி நகரின் பவுரிங் மருத்துவமனையில், செயற்கை கருத்தரிப்பு மையங்கள் திறக்கப்படும்.
கலபுரகி மற்றும் மைசூரிலும், தலா ஒவ்வொரு மையங்கள் அமைக்கப்படும். எந்த அரசு மருத்துவமனைகளில், இம்மையம் திறப்பது என, முடிவு செய்யவில்லை. மருத்துவமனைகளில் இந்த மையம் அமைக்க, விரைவில் டெண்டர் விடப்படும்.
அதிநவீன வாழ்க்கை முறை உட்பட, பல காரணங்களால், இன்றைய தலைமுறையினருக்கு, மலட்டுத்தன்மை அதிகரிக்கிறது.
இயற்கையான முறையில், குழந்தை பெற முடியாத தம்பதியர் பலர், செயற்கை கருத்தரிப்பு எனும் ஐ.வி.எப்., சிகிச்சையை நாடுகின்றனர். ஆனால் தனியார் மருத்துவமனையில், இத்தகைய சிகிச்சைக்கு நான்கு முதல் ஐந்து லட்சம் ரூபாய் செலவாகிறது.
ஏழைகளால் இந்த சிகிச்சையை செய்து கொள்ள முடியாது என்பதால், அவர்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கும் வகையில், அரசு சார்பில் ஐ.வி.எப்., சிகிச்சை மையங்களை, அரசு திறக்கிறது.
முதற்கட்டமாக ஹூப்பள்ளியின் கிம்ஸ் மருத்துவமனையில், ஐ.வி.எப்., சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. வரும் நாட்களில் பெங்களூரு, மைசூரு, கலபுரகியில் திறக்கப்படும்.
ஏழை குடும்பங்களுக்கு, ' ஆயுஷ்மான் பாரத் - ஆரோக்கிய கர்நாடகா' திட்டத்தின் கீழ், சிகிச்சை பெறலாம். ஐ.வி.எப்., சிகிச்சைக்கு ஒரு பயனாளிக்கு, 1.34 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை சிகிச்சை வெற்றி அடையாவிட்டால், இதே கட்டணத்தில் மூன்று முறை சிகிச்சையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிதியுதவியை, அரசு வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
