/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விவசாயிக்கு நிவாரணம் வழங்க தாமதம்; கலெக்டர் காரை ஜப்தி செய்ய உத்தரவு
/
விவசாயிக்கு நிவாரணம் வழங்க தாமதம்; கலெக்டர் காரை ஜப்தி செய்ய உத்தரவு
விவசாயிக்கு நிவாரணம் வழங்க தாமதம்; கலெக்டர் காரை ஜப்தி செய்ய உத்தரவு
விவசாயிக்கு நிவாரணம் வழங்க தாமதம்; கலெக்டர் காரை ஜப்தி செய்ய உத்தரவு
ADDED : டிச 06, 2025 05:27 AM

ஷிவமொக்கா: விவசாயிக்கு நிவாரணம் வழங்காமல் இழுத்தடித்ததால், ஷிவமொக்கா மாவட்ட கலெக்டரின் காரை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஷிவமொக்கா அருகேயுள்ள ஹரமகட்டா கிராமத்தில் வசிப்பவர் விவசாயி நந்தாயப்பா. இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை, குடியிருப்பு திட்டத்துக்காக மாநில அரசு 1992ல் கையகப்படுத்தியது.
இதற்காக, 22 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக கூறியது. ஆனால், ஒன்பது லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது.
பாக்கி தொகையை கேட்டு, அரசு அலுவலகங்களுக்கு அலைந்தார். பல ஆண்டுகளாக அலைந்தும் பலன் இல்லை. இதனால், மனம் வருந்திய விவசாயி, நிவாரண தொகையை வழங்கும்படி உத்தரவிடக்கோரி, ஷிவமொக்காவின் ஜெ.எம்.எப்.சி., நீதிமன்றத்தில மனுத்தாக்கல் செய்தார்.
விசாரணை நடத்திய நீதிமன்றம், விவசாயியின் நிலத்துக்கு நிவாரணமாக, 95.88 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுப்படி, மாவட்ட நிர்வாகம் நிவாரணம் வழங்கவில்லை. எனவே, மாவட்ட கலெக்டரின் காரை ஜப்தி செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி நீதிமன்ற ஊழியர்கள், மாவட்ட கலெக்டரின் காரை நேற்று ஜப்தி செய்தனர்.
விபத்து இழப்பீடு தராததால் அரசு பஸ் 'ஜப்தி'
கொப்பால் மாவட்டம் கங்காவதியில் இருந்து, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் விஜயநகரா மாவட்டம் ஹொஸ்பேட்டுக்கு, 2019 நவம்பர் 28ல், சென்று கொண்டிருந்தது. கடேபாகிலு பாலம் அருகே செல்லும் போது, எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில், கல்வித்துறை ஊழியர் முகமது சலாவுதீன் ஆயுபி, நிகாத் பேகம் ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
இவர்களது குடும்பத்தினர், விபத்து நிவாரணம் கோரி, கங்காவதி நகரின் முதலாவது கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நடத்திய நீதிபதி சதானந்த் நாயக், விபத்தில் இறந்த இருவரின் குடும்பத்தினருக்கும், 2025ன் ஜூலை, 25க்குள், 55.72 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, போக்குவரத்து துறையின் ஹொஸ்பேட் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, அதிகாரிகள் நிவாரணம் வழங்கவில்லை. இதுகுறித்து குடும்பத்தினர், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சை ஜப்தி செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன் தினம், ஹொஸ்பேட் பிரிவு பஸ், மத்திய பஸ் நிலையத்துக்கு வந்த போது அதனை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
மனுதாரர் தரப்பு வக்கீல் கூறியதாவது:
அடுத்த மூன்று மாதங்களில், நிவாரண தொகை, 55.72 லட்சம் ரூபாயை, 15.61 லட்சம் வட்டி சேர்த்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும். பணம் செலுத்தாவிட்டால், இந்த பஸ் ஏலம் விடப்படும். பாக்கி தொகைக்கு மற்றொரு பஸ் ஜப்தி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

