/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக காங்., தலைவர்களுக்கு டில்லி மேலிடம்... கண்டிப்பு!' எந்த கோரிக்கையுடனும் டில்லி வராதீர்கள்' என கடுப்பு
/
கர்நாடக காங்., தலைவர்களுக்கு டில்லி மேலிடம்... கண்டிப்பு!' எந்த கோரிக்கையுடனும் டில்லி வராதீர்கள்' என கடுப்பு
கர்நாடக காங்., தலைவர்களுக்கு டில்லி மேலிடம்... கண்டிப்பு!' எந்த கோரிக்கையுடனும் டில்லி வராதீர்கள்' என கடுப்பு
கர்நாடக காங்., தலைவர்களுக்கு டில்லி மேலிடம்... கண்டிப்பு!' எந்த கோரிக்கையுடனும் டில்லி வராதீர்கள்' என கடுப்பு
ADDED : நவ 05, 2025 12:26 AM
பெங்களூரு: கர்நாடக காங்கிரசில் நடக்கும் முதல்வர் மாற்றம், நவம்பர் புரட்சி சர்ச்சையால், டில்லி மேலிடம் எரிச்சலில் உள்ளது. தங்களை சந்திக்க தலைவர்கள் முட்டி மோதுவதால், கடுப்பில் உள்ள மேலிடம், 'கோரிக்கைகளுடன் யாரும் டில்லிக்கு வர வேண்டாம்' என, கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா, பல நெருக்கடிகள், சவால்களை கடந்து இரண்டரை ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளார். மிச்சமுள்ள இரண்டரை ஆண்டு ஆட்சியை நிறைவு செய்வோம் என்ற நம்பிக்கையில் உள்ளார். 'ஆட்சி காலத்தை நானே நிறைவு செய்வேன். மாநிலத்தில் முதல்வர் மாற்றப்பட மாட்டார்' என, பலமுறை பகிரங்கமாகவே கூறியுள்ளார்.
ஆனாலும், 'இவரது பதவி நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. எந்த நேரத்திலும் பறிபோகலாம். நவம்பரில் முதல்வர் மாற்றம் நிகழும். துணை முதல்வர் சிவகுமார் முதல்வர் பதவியில் அமர்வார்' என, சில அமைச்சர்கள், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூறுகின்றனர்.
மேலும், 'முதல்வர் பதவியில் சித்தராமையா, சிவகுமார் தலா இரண்டரை ஆண்டுகள் அமர, ஏற்கனவே மேலிட அளவில் ஒப்பந்தம் ஆகியுள்ளது. அதன்படி முதல் இரண்டரை ஆண்டு, சித்தராமையா முதல்வராக இருக்கிறார். அடுத்த இரண்டரை ஆண்டு, பதவியை சிவகுமாருக்கு விட்டுக் கொடுப்பார்' என்றும் கூறுகின்றனர்.
ஆனால், சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், 'முதல்வர் மாற்றப்பட மாட்டார். பதவி பகிர்வு குறித்து, எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. இது ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சியினரின் கற்பனை' எனக் கூறி, சித்தராமையாவுக்கு ஆதரவாக நிற்கின்றனர்.
இதற்கிடையில், முதல்வர் மாற்றம் நடந்தால், தங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா என, அமைச்சர்கள் சதீஷ் ஜார்கிஹோளி, பரமேஸ்வர் உட்பட சிலரும் எதிர்பார்க்கின்றனர். சிவகுமார் முதல்வரானால், தங்களுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என, சில அமைச்சர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
'முதல்வர் மாற்றத்துடன், அமைச்சரவையும் மாற்றி அமைக்கப்படும்' என்ற பேச்சு அடிபடுவதால், அமைச்சர் பதவி மீது கண் வைத்துள்ள பல எம்.எல்.ஏ.,க்கள், இம்முறை தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என, முதல்வர் மற்றும் துணை முதல்வர் வீட்டை வலம் வருகின்றனர்.
முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் பதவிக்காக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் முட்டி மோதுவது, இஷ்டப்படி கருத்து தெரிவிப்பதால், கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கோஷ்டி பூசல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
அரசு மற்றும் காங்கிரசுக்கு எதிரான அஸ்திரங்களை தேட, எதிர்க்கட்சிகள் அதிகம் கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லை. தேவையான அஸ்திரங்களை, காங்கிரசாரே கொடுக்கின்றனர்.
முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் பதவியை கேட்பது குறித்து, மேலிடத்திடம் வேண்டுகோள் விடுக்க டில்லிக்கு செல்ல தயாராகினர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, டில்லி செல்ல திட்டமிட்டிருந்தார். அங்கு காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தேசிய பொதுச் செயலர் வேணுகோபால், கர்நாடக காங்., பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை சந்திக்க நேரம் ஒதுக்கி தரும்படி கோரினார். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை.
'மேலிட தலைவர்கள் தற்போது, பீஹார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் உள்ளனர். கர்நாடக அரசியல் குறித்து, ஆலோசனை நடத்த யாரும் டில்லிக்கு வராதீர்கள்' என, டில்லி காங்., அலுவலக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். எனவே, சதீஷ் ஜார்கிஹோளி, தன் டில்லி பயணத்தை ரத்து செய்துவிட்டு, பெலகாவியிலேயே தங்கியுள்ளார்.
அதேபோன்று, அமைச்சர் பதவியை விரும்பும் சிலர், ஏற்கனவே டில்லிக்கு சென்று, தலைவர்களை சந்திக்க முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தற்போது மேலும் பலர், நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு, டில்லி செல்ல தயாராகின்றனர். மேலிட தலைவர்களை சந்திக்க அனுமதி அளிக்கும்படி மன்றாடுகின்றனர்.
தற்போது லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா, வேணுகோபால், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, ஜெய்ராம் ரமேஷ் உட்பட பல தலைவர்கள் பீஹாரில் முகாமிட்டுள்ளனர்.
எனவே, 'எங்களை சந்திக்க முடியாது. யாரும் கோரிக்கைகளுடன் டில்லிக்கு வராதீர்கள்' என, அவர்கள் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளனர். இதனால், கர்நாடக காங்., தலைவர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

