ADDED : ஜன 10, 2026 06:38 AM

பணி அல்லது கல்வி நிமித்தமாக, குடும்பத்தை விட்டு விலகி, வெளியூர்களில் தனியாக வசிக்கும் பிரம்மச்சாரிகளுக்கு, சமையல் செய்வது பெரும் தலைவலியாக இருக்கும். தினமும் ஹோட்டலில் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமும் கெடுகிறது. எனவே, தாங்களாகவே ஏதாவது சமைத்து சாப்பிடுகின்றனர். வேலைக்கு செல்லும் அவசரத்தில் சமைக்கவும் அதிக நேரத்தை செலவிட முடியாது. இவர்களுக்காகவே சில சிற்றுண்டிகள் உள்ளன. அவற்றில் சோள பான்கேக்கும் ஒன்றாகும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
• சோளம் - 1 கப்
• அரிசி மாவு - 2 கப்
• முட்டை கோஸ் - 1
• பட்டாணி - அரை கப்
• சீஸ் - 100 கிராம்
• எண்ணெய் - 2 ஸ்பூன்
• பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 ஸ்பூன்
• கொத்துமல்லி - ஒரு கைப்பிடி
• உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசி மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். சோளம், பட்டாணி, முட்டைகோசை குக்கரில் போட்டு, சிறிது உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். அதன்பின் தண்ணீரை வடித்துவிட்டு, காய்கறிகளை பாத்திரத்தில் போடவும். இதில், பச்சை மிளகாய் பேஸ்ட், பொடியாக நறுக்கிய கொத்துமல்லியை போட்டு பிசையவும்.
அதன்பின் தோசைக்கல் வைத்து சூடானதும், ஏற்கனவே பிசைந்து வைத்துள்ள அரிசி மாவை பான் கேக் போன்று தோசைக்கல்லில் போடவும். இது பாதி வெந்ததும், சோளம், காய்கறி கலவையை போடவும். அதன் மீது சீஸ் துருவலை துாவவும். இதை இரண்டு நிமிடம் வேக வைத்தால், சோள பான்கேக் தயார்
- நமது நிருபர் - .

