ADDED : செப் 05, 2025 11:13 PM

மற்ற காய்கறிகளை போன்று முள்ளங்கியிலும், ஏராளமான புரத சத்துகள் உள்ளன. வாயு பிரச்னையை சரி செய்யும் தன்மை கொண்டது. ஆனால் பலருக்கும் முள்ளங்கி வாசம் பிடிப்பது இல்லை. குழந்தைகளும் கூட முகத்தை சுழிக்கின்றனர். இறைச்சி உணவு, சட்னி மற்றும் சூப் தயாரிக்க முள்ளங்கி பயன்படுத்துகின்றனர்.
முள்ளங்கியில் குழந்தைகளுக்கு பிடித்தமான தின்பண்டங்கள் செய்யலாம். இவற்றில் கச்சோரியும் ஒன்றாகும். இதன் சுவை அதிகம் என்பதால், முள்ளங்கி பிடிக்காத குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடுவர். இதை எப்படி செய்வது என, பார்ப்போமா.
செய்முறை முதலில் முள்ளங்கியை தோல் நீக்கி, கழுவி துருவி கொள்ளவும். அடுப்பில் பாத்திரம் வைத்து, ஒரு கப் நீர் ஊற்றவும். நீர் கொதிக்கும் போது துருவிய முள்ளங்கியை போட்டு, சில நிமிடங்கள் வேக வைக்கவும்.
அதன்பின் அரிசி மாவு சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறி, மிதமான தீயில் இரண்டு நிமிடம் வேக வைக்கவும்.
முள்ளங்கி, அரிசி மாவு கலவை கெட்டியான பின், அடுப்பை அணைக்கவும். கலவையில் நெய், பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழை, சீரகம், சோம்பு, உப்பு, மிளகாய் துாள், மஞ்சள் துாள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக கிளறவும்.
அதன்பின் மாவை சிறு, சிறு உருண்டைகளாக்கி, சிறிய பூரி போன்று கச்சோரி தட்டுங்கள். வட்டமாக தட்டுவது கஷ்டமாக இருந்தால், தோசைக்கல்லில் மாவை பரப்பி, சிறு கிண்ணத்தை பயன்படுத்தி, வட்ட வட்டமாக வெட்டி கொள்ளலாம்.
அனைத்து உருண்டைகளையும் கச்சோரி தட்டவும். அடுப்பில் வாணலி வைத்து, எண்ணெய் ஊற்றவும். சூடான பின், மிதமான தீயில் வைத்து, கச்சோரிகளை போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக வறுக்கவும்.
தட்டில் டிஷ்யூ பேப்பர் வைத்து, அதில் கச்சோரிகளை வைக்கவும். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும். தயாரிப்பதும் கஷ்டம் அல்ல. அதிகபட்சம் அரை மணி நேரத்தில் தயாரிக்கலாம். முள்ளங்கி கச்சோரிக்கு தக்காளி சாஸ், கிரீன் சட்னி தொட்டுக்கொள்ள பொருத்தமாக இருக்கும்.
- நமது நிருபர் -