
பெங்களூரில் பி.எம்.டி.சி., பஸ்களில் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கானோர் பயணிக்கின்றனர். இதில் பயணிக்கும் பலரும் குப்பைகளை பஸ்களின் ஜன்னல் வழியாக சாலையில் வீசுகின்றனர். இதனால், துப்புரவு பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பொது இடங்களில் குப்பைகளை வீசுவது குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பது காரணமாக இருக்கிறது.
இதற்காக யாராவது ஒருவர் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவா முடியும் என நீங்கள் நினைக்கலாம். இதேபோல் அனைவரும் நினைத்துவிட்டால் யார் தான் பயணியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என வீராப்பாய் கிளம்பியவர் தான் மருத்துவர் சாந்தி தும்மலா.
கன்னடம், ஹிந்தி பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் பகுதியை சேர்ந்தவர் சாந்தி தும்மலா, 55; பல் மருத்துவர். இவர் கையில் ஒரு மைக்குடன் பி.எம்.டி.சி., பஸ்சில் ஏறி, அங்குள்ள பயணியரிடம் குப்பைகளை வீசக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். முதலில் பயணியர் முன் கன்னடத்தில் பேசுவார்; பின், ஹிந்தியில் பேசுவார்.
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சாந்தி, பி.எம்.டி.சி., பஸ்சில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ இணையத்தில் பரவியது. இதன் மூலம் மருத்துவர் சாந்தி மிகவும் பிரபலமானார். அவரின் முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
நீண்ட உழைப்பு இது குறித்து அவர் கூறியதாவது:
நான் பி.எம்.டி.சி., பஸ்களில் ஏறி பயணியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். பொதுவாக பயணியர் பலரும் பஸ் டிக்கெட்டுகள், பான் மசாலா கவர்களை அதிகமாக துாக்கி வீசுகின்றனர். சிறுவர், சிறுமியர் சாக்லேட் கவர்களை வீசுகின்றனர். இதனால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எளிமையாக விளக்குவேன். முதலில் கன்னடத்தில் பேசுவேன். அடுத்து ஹிந்தியில் பேசுவேன். முதலில் என்னை பலரும் விமர்சித்தனர். பிறகு பலரும் பாராட்டினர். இதற்கு எனது நீண்ட உழைப்பே காரணம்.
எனது பேச்சை கேட்டு சிறுவர், சிறுமியர் 'இனிமேல் குப்பைகளை சாலையில் வீசமாட்டேன்' என சொல்லிவிட்டு போவர். அதை கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கும். இது போல சில பெரியவர்களும் சொல்லிவிட்டு செல்வர். தேசத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். அதற்காக துாய்மையான இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -:

