/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அலமாட்டி அணை உயரம் அதிகரிக்க துணை முதல்வர் சிவகுமார் ஆர்வம்
/
அலமாட்டி அணை உயரம் அதிகரிக்க துணை முதல்வர் சிவகுமார் ஆர்வம்
அலமாட்டி அணை உயரம் அதிகரிக்க துணை முதல்வர் சிவகுமார் ஆர்வம்
அலமாட்டி அணை உயரம் அதிகரிக்க துணை முதல்வர் சிவகுமார் ஆர்வம்
ADDED : செப் 07, 2025 02:31 AM

விஜயபுரா: ''அலமாட்டி அணையின் உயரத்தை, 518 அடி உயரத்தில் இருந்து, 524 அடியாக உயர்த்த அரசு ஆர்வம் காட்டுகிறது. அடுத்த வாரம் நிலம் கையகப்படுத்துவது குறித்து அறிவிக்கப்படும்,'' என, நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
விஜயபுராவில் உள்ள அலமாட்டி அணைக்கு நேற்று முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் சமர்ப்பண பூஜை செய்தனர்.
பின் சிவகுமார் அளித்த பேட்டி:
அலமாட்டி அணையின் உயரத்தை 518 அடி உயரத்தில் இருந்து 524 அடியாக உயர்த்த அரசு ஆர்வம் காட்டுகிறது. திட்டத்துக்கு தேவையான நிலம் கையகப்படுத்துவது குறித்து, அரசு முடிவு செய்யும். இது குறித்து, சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் அமைச்சர்களுடன், முதல்வர் ஆலோசனை நடத்தி, நிலத்துக்கு விலை நிர்ணயிப்பார்.
திட்டத்தால் மூழ்கும் நிலங்களுக்கு, தாராளமாக நிவாரணம் வழங்க வேண்டும். கால்வாய்களில் தண்ணீர் பாய்ந்து செல்வது, விவசாயிகளுக்கு வசதியாக இருக்கும். குறிப்பிட்ட தொகையை நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கவில்லை. திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அலமாட்டி அணை உயரம் அதிகரிப்பது குறித்து, விரைவில் அறிவிப்பு வெளியிடுவது குறித்து மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரிடம் நானும், சிறிய நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் வேண்டுகோள் விடுத்துள்ளோம். பிரதமரின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். இது தொடர்பாக, ஆலோசனை நடத்த சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் கூட்டம் அழைக்கப்பட்டது. ஆனால் ஒரு முறை ஆந்திரா, மற்றொரு முறை மஹாராஷ்டிரா அரசு, கூட்டத்தை தள்ளி வைத்தது. மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்துவதாக, ஜல்சக்தி துறை அமைச்சர் கூறியுள்ளார்.
அலமாட்டி அணையின் உயரத்தை, அதிகரிப்பது குறித்து இம்முறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. நடப்பாண்டு 100 டி.எம்.சி.,க்கும் அதிகமான தண்ணீர் வீணாக, கடலில் சேர்ந்தது. சில நேரங்களில் 400 டி.எம்.சி., நீர் கடலில் கலந்த உதாரணங்களும் உள்ளன. வருண பகவானின் கருணையால், அலமாட்டி அணை நிரம்பியது, மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.