தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'சொந்த ஜாதியினரே என்னை விமர்சிக்கின்றனரே' துணை முதல்வர் சிவகுமார் வருத்தம்

 'சொந்த ஜாதியினரே என்னை விமர்சிக்கின்றனரே' துணை முதல்வர் சிவகுமார் வருத்தம்

 'சொந்த ஜாதியினரே என்னை விமர்சிக்கின்றனரே' துணை முதல்வர் சிவகுமார் வருத்தம்


ADDED : ஜன 12, 2026 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 06:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''என்னை வேறு யாரும் விமர்சிப்பது இல்லை. என் சொந்த ஜாதியினரே விமர்சிக்கின்றனர்,'' என துணை முதல்வர் சிவகுமார் வருந்தினார்.

பெங்களூரில் நேற்று நடந்த ஒக்கலிகர் மாநாட்டில் சிவகுமார் பேசியதாவது:

தினமும் பொழுது விடிந்தால், என்னை விமர்சிக்கின்றனர். டி.வி., மற்றும் சமூக வலைதளங்களில் என்னை பற்றியே விவாதிக்கின்றனர். பின்னால் இருந்து என் முதுகில் குத்துகின்றனர்; முன்னால் இருந்தும் குத்துகின்றனர். என் சொந்த ஜாதியினரே விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது.

என்னை பாறை, பாறை என்கின்றனர். பாறை என்றால் சாதாரணமானதா; அது இயற்கை. பாறையை செதுக்கினால் சிற்பம், பூஜித்தால் கலாச்சாரம். என் தந்தை முதல்வராகவோ, பிரதமராக இருக்கவில்லை. என் தந்தை சாதாரண பஞ்சாயத்து கவுன்சிலராக இருந்தார். என் தாத்தா பஞ்சாயத்து தலைவராக இருந்தார். நாங்கள் உழைத்ததால் இன்று இந்த அளவுக்கு உயர்ந்து உள்ளோம்.

கட்சிக்காக பெங்களூரில் அடி, உதை வாங்கி இதுவரை வந்துள்ளேன். வரும் நாட்களில் எங்களுக்கு என்ன தருவர் என்பது தெரியாது. கட்சி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. அரசியல் உள் நோக்கில், என்னை தேவையின்றி சிறைக்கு அனுப்பினர். பலரும் எனக்காக பிரார்த்தனை செய்தனர். எனக்கு நல்லது நடக்க வேண்டும் என, ஜாதியை மீறி மக்கள் எனக்கு ஓட்டு போட்டனர். முயற்சி தோல்வி அடையலாம். ஆனால் பிரார்த்தனை தோற்காது; உழைப்புக்கு பலன் கிடைக்கும்.

விமர்சனங்கள் காணாமல் போகும். நாம் செய்யும் பணிகளே நிலைத்து நிற்கும். கடவுள் வரம் மற்றும் சாபம் என இரண்டையும் கொடுப்பதில்லை. வாய்ப்பு மட்டுமே கொடுப்பார். கொடுத்த வாய்ப்பில், நாம் சரியாக பணியாற்ற வேண்டும்.

நான் உங்களுக்கு ஒரு அறிவுரை கூறுகிறேன். மற்றவருக்கு கடன் கொடுக்கும் போது உஷாராக இருங்கள். சரியான ஆவணங்கள் இல்லாமல், கடன் கொடுத்தால் முடிந்தது கதை. நம்பிக்கை அடிப்படையில் கடன் கொடுத்து ஏமாந்த பலரை, நாம் பார்த்திருக்கிறோம். உங்கள் நிழலையே நீங்கள் நம்பக்கூடாது.

அமலாக்கத்துறை, சி.பி.ஐ., தொந்தரவு தாங்காமல் பலரும் வேறு நாட்டுக்கு இடம் மாறுகின்றனர். எனக்கும் இது போன்று, ஆலோசனை கூறுகின்றனர். ஆனால் கஷ்டமோ, சுகமோ அனைத்தையும் அனுபவித்தபடி இங்கேயே இருப்பேன் என, கூறினேன். பழுத்த பழம்தான் கல்லடி படும். காயாக இருந்தால் யார் அடிப்பர். யார் வலுவாக இருக்கின்றனரோ, அவர்களுக்கு எதிரிகள் அதிகமாவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us