/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கான்ட்ராக்டர்களின் வலி புரிகிறது துணை முதல்வர் சிவகுமார் உருக்கம்
/
கான்ட்ராக்டர்களின் வலி புரிகிறது துணை முதல்வர் சிவகுமார் உருக்கம்
கான்ட்ராக்டர்களின் வலி புரிகிறது துணை முதல்வர் சிவகுமார் உருக்கம்
கான்ட்ராக்டர்களின் வலி புரிகிறது துணை முதல்வர் சிவகுமார் உருக்கம்
ADDED : அக் 20, 2025 07:03 AM

பெங்களூரு: ''கான்ட்ராக்டர்கள் வலி எனக்கு புரிகிறது. ஆனால் அரசை மிரட்ட நினைத்தால் நான் பயப்பட மாட்டேன்,'' என்று, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.
பெங்களூரு குமாரகிருபா அரசு இல்லத்தில் துணை முதல்வர் சிவகுமாரை, கான்ட்ராக்டர்கள் சங்க தலைவர் மஞ்சுநாத் மற்றும் அவரது குழுவினர் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு சந்தித்து பேசினர். நிலுவையில் உள்ள 33,000 கோடி ரூபாயை விடுவிக்க கோரிக்கை விடுத்தனர்.
இந்த சந்திப்புக்கு பின் சிவகுமார் அளித்த பேட்டி:
பா.ஜ., ஆட்சியில் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்த போது, பட்ஜெட் வரம்பை மீறி கான்ட்ராக்டர்களுக்கு அதிக வேலை கொடுத்து உள்ளனர். பா.ஜ., ஆட்சியில், கான்ட்ராக்டர்களுக்கு வைக்கப்பட்ட நிலுவை தொகையும் சேர்த்து நாங்கள் வழங்குகிறோம். இது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
நீர்பாசனத்துறையிடம் 200 கோடி ரூபாய் நிதி உள்ளது. நிதி துறை அனுமதி கொடுத்ததும், எந்த கான்ட்ராக்டர் வங்கி கணக்கில் முதலில் பணம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்வோம்.
சிறிய கான்ட்ராக்டர்களுக்கு 15 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரையும்; பெரிய கான்ட்ராக்டர்களுக்கு 2,000 கோடி ரூபாய் வரையும் நிலுவை தொகை செலுத்த வேண்டி உள்ளது.
அனைவருக்கும் ஒரே நேரத்தில் பணம் கொடுப்பது சாத்தியம் இல்லை. கான்ட்ராக்டர்கள் வலி எனக்கு புரிகிறது. ஆனால் அரசை மிரட்டுவதற்காக ஊடகங்கள் முன்பு பேசினால், நான் பயப்பட மாட்டேன். எங்கள் ஆட்சியில் கமிஷன் குற்றச்சாட்டு இருந்தால், நீதிமன்றம் செல்லுங்கள் என்று கான்ட்ராக்டர்களிடம் கூறி உள்ளேன்.
கூடிய விரைவில் முதல்வரை சந்தித்து, கான்ட்ராக்டர்களுக்கு நிதி ஒதுக்குவது பற்றி பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கான்ட்ராக்டர் சங்க தலைவர் மஞ்சுநாத் கூறுகையில், ''டிசம்பர் மாதத்திற்குள் எங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை விடுவிப்பதாக, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார். இல்லாவிட்டால் ஏற்கனவே அறிவித்தது போல வேலை நிறுத்தம் செய்வோம். அரசுக்கு எதிராக கவர்னர், காங்கிரஸ் மேலிடத்திடம் புகார் செய்வோம்,'' என்றார்.